*கரும்பு, மஞ்சள் விற்பனை அமோகம்
திருவண்ணாமலை : திருவண்ணாமலை கடை வீதிகளில், பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்கான புத்தாடைகள் மற்றும் படையல் பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு திருநாளான பொங்கல் விழா இன்று போகிப் பொங்கலுடன் உற்சாகமாக தொடங்குகிறது.
பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற இலக்குடன் போகித் திருநாள் கொ்ண்டாடப்படுகிறது, அதைத்தொடர்ந்து, தைத் திங்கள் முதல் நாளான நாளை பொங்கல் திருநாள் கொண்டாட்டம் நடைபெற உள்ளது. இயற்கைக்கும், சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக புதுப்பானையில் பச்சரிசி பொங்கலிட்டு மக்கள் கொண்டாடுகின்றனர்.
அதையொட்டி, நகரங்கள், கிராமங்கள் என எல்லா இடங்களிலும் கொண்டாட்டம் கலைகட்ட தொடங்கிவிட்டது. வேலை காரணமாக வெளியூர்களில் இருந்தவர்கள், பொங்கல் திருநாளை உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடுவதற்காக தங்களுடைய சொந்த ஊர்களுக்கு குடும்பம், குடும்பமாக திரும்பி வருகின்றனர். அதனால், கடந்த இரண்டு நாட்களாகவே பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து திருவண்ணாமலை நகருக்கு நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. அனைத்து பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது,இந்நிலையில், திருவண்ணாமலை கடை வீதிகளில் புத்தாடைகள் வாங்குவதற்காகவும், பொங்கல் படையல் பொருட்களான கரும்பு, மஞ்சள், மலர்கள், பூசணி போன்ற பொருட்களை வாங்கவும் மக்கள் கூட்டம் நேற்று அலைமோதியது. பூக்களின் விலை வெகுவாக உயர்ந்திருந்தது.
மல்லி வரத்து குறைந்தால், முல்லை, காக்கட்டான் போன்றவற்றின் விலையும் உயர்ந்திருந்தது. தை மாதம் தொடங்குவதால், இனிவரும் நாட்களில் பூக்கள் விலை அதிகரித்திருக்கும் என வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.
மேலும், பொங்கல் வைக்க புதிய மண் பானைகளை ஆர்வமுடன் வாங்கினர். அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் அருகே சிவாஞ்சிகுளம் பகுதியிலும், தேரடி வீதியிலும், நகரின் முக்கிய சாலைேயாரங்களிலும் மண் பானைகள் விற்பனைக்கு குவிந்திருந்தன.
மேலும், வண்ண கோலப் பொடி, மாடுகளுக்கு பயன்படுத்தப்படும் கயிறு மற்றும் அலங்கார பொருட்கள் விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது. அதையொட்டி, கிரிவலப்பாதையில் அரசு கலைக் கல்லூரி அருகே தற்காலிக கடைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மாட வீதி, அண்ணா நுழைவு வாயில் உள்ளிட்ட பகுதிகளில் பனிக் கரும்பு விற்பனைக்காக குவிந்திருக்கிறது. ஒரு கரும்பின் விலை ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனையானது. கடலூர், ஈரோடு, சேலம் பகுதிகளில் இருந்து கரும்பு விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், சாலையோரங்களில் அமைந்திருந்த தற்காலிக கடைகளில், மலிவு விலையில் விற்பனை செய்யப்பட்ட புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டினர். துணி கடைகளில் கூட்டம் அலைமோதியது. பாரம்பரிய பொங்கல் திருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
The post திருவண்ணாமலையில் பொங்கல் திருநாளையொட்டி கடைவீதிகளில் கூட்டம் அலைமோதியது appeared first on Dinakaran.