திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவையொட்டி இன்று மகா ரதம் வெள்ளோட்டம்: 2,000 போலீசார் பாதுகாப்பு

1 week ago 3

திருவண்ணாமலை, நவ.8: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, மகா ரதம் வெள்ளோட்டம் இன்று காலை நடக்கிறது. அதையொட்டி, 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, அடுத்த மாதம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. விழாவின் 7ம் நாளான டிசம்பர் 10ம் தேதி தேர் திருவிழாவும், விழாவின் நிறைவாக மகாதீப பெருவிழாவும் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு தீபத்திருவிழாவை முன்னிட்டு பஞ்ச ரதங்கள் சீரமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெரிய தேர் எனப்படும் மகா ரதம் 50 ஆண்டுகளுக்கு பிறகு முற்றிலுமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில், மகா ரதத்தின் முக்கிய அம்சங்களான தேவாசனம், நராசனம், சிம்மாசனம், அலங்கார தூண்கள், தேவாசனம், இறையாசனம், கொடுங்கை நிலைகள், பிரம்மா மற்றும் துவாரகபாலகர்கள் சிலைகள், சிம்மயாழி, கொடியாழி, தேர் சிற்பங்கள் ஆகியவை புதியதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் தேர் சக்கரங்கள் பழுது நீக்கப்பட்டு, ஹைட்ராலிக் பிரேக் ஆகியவை சீரமைக்கப்பட்டுள்ளன. அதனை, பெல் நிறுவன பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்தனர்.

மேலும், பொதுப்பணித்துறை (கட்டுமானம்) பொறியாளர்கள், தேர் உறுதித்தன்மையை ஆய்வு செய்து சான்றளித்தனர். இந்நிலையில், புதுப்பிக்கப்பட்ட மகாரதம் வெள்ளோட்டம் இன்று காலை 7 மணி முதல் 8.30 மணிக்குள் மாட வீதியில் நடைபெறுகிறது. அதையொட்டி, மாடவீதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளன. மேலும், வெள்ளோட்டத்தை முன்னிட்டு 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். தேர் வடம் பிடிக்கும் பணியில் கல்லூரி மாணவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதையொட்டி, வேலூர் சரக டிஐஜி தேவராணி, திருவண்ணாமலை எஸ்பி சுதாகர், திருப்பத்தூர் எஸ்பி ஸ்ரேயா குப்தா ஆகியோர் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, தேர் வெள்ளோட்டம் நடைபெறும்போது, மாட வீதியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தேரோட்டம் தொடங்கி, நிலையை அடையும் வரை, மாட வீதியில் போக்குவரத்து மாற்றம் செய்யவும், மின் நிறுத்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

The post திருவண்ணாமலையில் தீபத்திருவிழாவையொட்டி இன்று மகா ரதம் வெள்ளோட்டம்: 2,000 போலீசார் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Read Entire Article