திருவண்ணாமலையில் தீபத்திருவிழா கோலாகலம் பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனி: அடுத்தடுத்து 5 தேர்கள் வீதி உலா

1 month ago 4

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7ம் நாளான நேற்று மகா தேரரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது. அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரில் நேற்று காலை 6 மணியளவில் அலங்கார ரூபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர் தேரடி வீதியில் அலங்கரித்து நிலை நிறுத்தியிருந்த பஞ்ச ரதங்களில், விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சிறப்பு பூஜைகளுடன் தேர்கள் வீதியுலா நடந்தது. மகா ரதம் பவனி பகல் 12.58 மணியளவில் தொடங்கியது. அப்போது, தேரடி வீதியில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் ‘அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என விண்ணதிர முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவில், கலெக்டர் பாஸ்கர பாண்டியன், எஸ்பி சுதாகர், மாநில தடகளச்சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், டிஆர்ஓ ராமபிரதீபன், கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், இணை ஆணையர் ஜோதி, மேயர் நிர்மலா வேல்மாறன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேளதாளம் முழங்க, மங்கள இசை ஒலிக்க, தூப தீபாராதனையுடன் மாடவீதியில் பவனி வந்த மகா ரதத்தின் மீது பக்தர்கள் மலர்களை தூவி வணங்கினர். மாடவீதியில் பவனி வந்த மகா ரதம், இரவு 8.30 மணியளவில் நிலையை அடைந்தது. அதைத்தொடர்ந்து, அம்மன் தேர் பவனி புறப்பாடு நடந்தது. அலங்கார ரூபத்தில் தேரில் பவனி வந்து பராசக்தி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண்கள் மட்டுமே அம்மன் தேர் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். நிறைவாக, சண்டிகேஸ்வரர் தேர் மாடவீதியில் பவனி வந்தது. நேற்று காலை 6.36 மணிக்கு தொடங்கி, நள்ளிரவு வரை தொடர்ந்து நடந்த தேரோட்டத்தை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டிருந்தனர்.

அதனால், மாடவீதி மட்டுமின்றி, நகரின் எல்லா திசைகளிலும் பக்தர்கள் வெள்ளத்தில் விழாக்கோலமாக காட்சியளித்தது. தேரோட்டத்தில், நூற்றுக்கணக்கான தம்பதியர், தங்கள் குழந்தைகளை கரும்புத் தொட்டிலில் சுமந்து, கோயில் 3ம் பிரகாரம் மற்றும் தேரோடும் மாடவீதியில் வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், தொட்டிலுக்கு பயன்படுத்திய கரும்பு மற்றும் சேலையை அண்ணாமலையார் கோயிலில் காணிக்கையாக வழங்கினர்.

The post திருவண்ணாமலையில் தீபத்திருவிழா கோலாகலம் பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனி: அடுத்தடுத்து 5 தேர்கள் வீதி உலா appeared first on Dinakaran.

Read Entire Article