திருவண்ணாமலை-சென்னைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் * முக்கிய நகரங்களுக்கு நேரடி ரயில் சேவை வேண்டும் * ஆலோசனைக் கூட்டத்தில் எம்பி அண்ணாதுரை வலியுறுத்தல் ஆண்டுக்கு ₹19 கோடி வருவாய் தரும் ஆன்மிக நகரம்

6 hours ago 2

திருவண்ணாமலை, ஏப். 26: திருச்சி கோட்ட ரயில்வே சார்பில் நடைபெறும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிப்பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் திருச்சியில் நடந்தது. திருவண்ணாமலை தொகுதி எம்பி சி.என்.அண்ணாதுரை கலந்துகொண்டு பேசியதாவது: திருவண்ணாமலை பிரசித்தி பெற்ற ஆன்மிக நகரமாகும். எனவே, காட்பாடி – விழுப்புரம் இடையிலான வழித்தடத்தில் கடந்த 2021ம் ஆண்டு ₹25 லட்சம் மட்டுமே வருவாய் கிடைத்தது. ஆனால், 2024-2025ம் ஆண்டில் ₹19.10 கோடி வருவாய் கிடைத்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, ₹12.80 கோடி வருவாய் திருவண்ணாமலை நிறுத்தத்தின் மூலம் கிடைத்திருக்கிறது. எனவே, திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கும் தினசரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்.

சென்னை எழும்பூரில் இருந்து திருவண்ணாமலைக்கு தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருக்கோவிலூர் வழியாக தீபம் எக்ஸ்பிரஸ் எனும் பெயரில் ரயில் சேவை இயக்க வேண்டும். ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை வருகின்றனர். எனவே, ஐதராபாத்-திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும். அதேபோல், திருச்சி – திருப்பதி இடையே விழுப்புரம், திருவண்ணாமலை வழியாக தினசரி ரயில் இயக்க வேண்டும். மேலும், டெல்லி, ஹரிதுவார், வாரனாசி, மும்பை, அகமதாபாத் போன்ற நகரங்களுக்கு திருவண்ணாமலை, வேலூர் வழியாக வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க வேண்டும். அதேபோல், திருவண்ணாமலை – சென்னை இடையே வந்தே பாரத் மெட்ரோ எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும். அதேபோல், நீண்ட காலமாக நிலுவைில் உள்ள திண்டிவனம் – திருவண்ணாமலை புதிய ரயில் பாதை திட்டத்தையும், காட்பாடி- விழுப்புரம் இடையிலான இரட்டை பாதை திட்டத்தையும் நிறைவேற்ற வேண்டும்.

திருவண்ணாமலை ரயில் நிலைய மேம்பாட்டு பணிக்காக கூடுதல் நிதி ஒதுக்கி, பணிகளை விரைவுபடுத்த வேண்டும். திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் உடனடியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். விழுப்புரம்-திருப்பதிக்கு திருவண்ணாமலை வழியாக இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். திருவண்ணாமலை ரயில் நிலையத்தை என்எஸ்ஜி-5ல் இருந்து என்எஸ்ஜி-4 தரத்துக்கு ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளது. அதனை, என்எஸ்ஜி- 3 தரத்துக்கு உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post திருவண்ணாமலை-சென்னைக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் * முக்கிய நகரங்களுக்கு நேரடி ரயில் சேவை வேண்டும் * ஆலோசனைக் கூட்டத்தில் எம்பி அண்ணாதுரை வலியுறுத்தல் ஆண்டுக்கு ₹19 கோடி வருவாய் தரும் ஆன்மிக நகரம் appeared first on Dinakaran.

Read Entire Article