திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாட வீதியில் இரண்டாம் கட்டமாக கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தேரோடும் மாடவீதியில் கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் பணியின் முதற்கட்டமாக பேகோபுரம் தெரு மற்றும் பெரிய தெரு ஆகியவை ஏற்கனவே தரம் உயர்த்தப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாம் கட்டமாக தேரடி வீதி மற்றும் திருஉடல் தெருவில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் கான்கிரீட் சாலையாக தரம் உயர்த்தும் பணி ரூபாய் 15 கோடி மதிப்பீட்டில் தற்போது நடைபெற்று வருகிறது.
இரண்டாம் கட்டமாக கான்கிரீட் சாலை தரம் உயர்த்தும் பணி கடந்த பிப்ரவரி மாதம் பொது பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து தேரடி விதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு புதைவட மின்பாதை அமைக்கும் பணி முதலில் தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக இம்மாதம் முதல் வாரத்தில் தேரடி வீதி, காந்தி சிலை அருகே இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்திற்கு தார் சாலைகள் அகற்றப்பட்டு கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
அதேபோல், திருவூடல் தெரு மேட்டுப்பகுதியில் இருந்து கற்பக விநாயகர் கோயில் வரை கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தற்போது தார் சாலைகள் அகற்றப்பட்டு கான்கிரீட் சாலைக்கான பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.
The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி தீவிரம்: சித்ரா பவுர்ணமிக்குள் விரைந்து முடிக்க நடவடிக்கை appeared first on Dinakaran.