திருமேனிகளை இறைவன் இறைவியே தேர்ந்தெடுத்த தலம்.. குலசை முத்தாரம்மன் கோவில் சிறப்புகள்

3 months ago 29

திருச்செந்தூர் மாநகரிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் கடற்கரை நெடுஞ்சாலையில் திருச்செந்தூரிலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் குலசேகரன்பட்டினம் என்னு பேரூரில், கடற்கரைக்கு அருகாமையில் சுவாமி ஞானமூர்த்தீசுவரருடன் அமர்ந்திருந்து அன்னை முத்தாரம்மன் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருத்தலம் அமைந்துள்ளது.

பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் இவ்வூர் பெருநகராக வளர்ச்சி பெற்றது. எனவே அந்த மாமன்னனின் பெயரால் இவ்வூர் குலசேகரன்பட்டினம் எனப் பின்னர் அழைக்கப்படலாயிற்று.

இந்நகரம் இயற்கைத் துறைமுகமாக சிறப்புற்றிருந்த காலத்தில் இலங்கை, சிங்கப்பூர், பர்மா போன்ற அயல் நாடுகளோடும் மும்பை, கொல்கத்தா, கள்ளிக்கோட்டை போன்ற பெருநகரங்களோடும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தது. நவதானியங்கள், தேங்காய், எண்ணெய், மரம் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டும், உப்பு, கருப்புக்கட்டி போன்ற பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டும் செல்வச் செழிப்புடன் திகழ்ந்தது. பாண்டிய மன்னர்கள் அரபு நாடுகளிலிருந்து குதிரைகளை இத்துறைமுகம் வழியாக இறக்குமதி செய்தனர்.

அன்னையின் அருட்பார்வையால் ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில் சிறப்புற்று விளங்கியது. இத்தொழிலைச் செய்யும் பெருமக்கள் இன்றும் பெருஞ்செல்வந்தர்களாக இருந்து அன்னைக்கு அரும்பணி செய்து வருகின்றனர். தங்க நாணயங்கள் அச்சிடும் அக்க சாலைகள் இருந்ததற்குச் சான்றாக அக்கசாலை விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ளது எண்ணத்தக்கது.

இந்நகரில் இருந்த உப்புத் தொழிற்சாலை மேலாளர் 'லோன் துரை' அவர்களின் ஆட்சியும் வீழ்ச்சியும் வரலாற்றில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதாரத்திலும் வரலாற்றிலும் நீங்காத இடத்தைப் பிடித்துள்ள இந்நகரம் அன்னையின் அருளாட்சியால் இன்று சீரோடும் சிறப்போடும் திகழ்ந்துவருகிறது.

மூர்த்தியின் சிறப்பு:

மூர்த்தம் என்ற சொல்லுக்கு உருவம் என்று பொருள் இறைவன் உருவமாகவும், அருவமாகவும் அருவுருவமாகவும் அமர்ந்து காட்சி கொடுத்துக் கொண்டிருக்கின்றான். இங்கே அம்மையும், அப்பனும் ஒரு சேர ஒரே பீடத்தில் எழுந்தருளியுள்ளனர். இப்போது நாம் வழிபடும் உருவுக்குக் கீழ் பாதத்தின் பக்கத்தில் தானே தோன்றிய சுயம்பு உருவத்தைக் காணலாம். அது சுயம்புவாகத் தானே தோன்றியது, உளி கொண்டு செதுக்காதது.

வீரகாளியம்மன், பத்ரகாளியம்மன், கருங்காளியம்மன், முப்புடாரிஅம்மன், முத்தாரம்மன், உச்சினிமாகாளியம்மன், மூன்று முகம் கொண்ட அம்மன், வண்டி மறித்த அம்மன் என்று அட்டகாளிகளுக்கும் (எட்டு காளிகள்) ஆலயங்கள் அமைந்துள்ளன. இந்த அட்டகாளிகளின் முதன்மையானதாகச் சிறந்து விளங்கும் தாய் முத்தாரம்மனாகும். இந்த அம்மனைத் தரிசித்து வந்தால் தரித்திரங்கள் விலகி அனைத்து நலன்களையும் பெறுவர்.

ஆலயத்தில் இப்போது வழிபடும் திருமேனியை எவ்வாறு பெரிய அளவில் வடிவமைப்பது? என்று பக்தர்கள் குழம்பிப் போயிருந்த சமயத்தில் அம்பாள் திருக்கோவில் அர்ச்சகர் கனவில் தோன்றி "மகனே எனது உருவத்தை வேண்டுமெனில் குமரி மாவட்டம் மைலாடி என்னும் ஊருக்குச் செல்க" என்று கூறி மறைந்தாள். அதே சமயம் அம்பாள் சாமியுடன் மைலாடி ஊரில் சுப்பையா ஆசாரி என்பவர் கனவில் தோன்றி "மகனே எங்கள் வடிவத்தை உற்று நோக்கு இவ்வடிவத்தை ஒரே கல்லில் ஒரே பீடத்தில் வடித்துக்கொடு, இக்கல் தென் திசையிலுள்ள ஆண் பெண் பாறையில் உள்ளது. குலசைப் பக்தர்கள் வருவர். அவர்களிடம் இப்பாறையிலுள்ள கல்லிலிருந்து வடித்தெடுத்த திருமேனியைக் கொடுத்தனுப்பு" என்று கூறி மறைந்தாள். அதன்படியே மைலாடி சென்று சிற்பி சுப்பையா ஆசாரியைச் சந்தித்து அவர்களால் வடித்தெடுக்கப்பட்ட திருமேனியை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்து வணங்கி வருகின்றனர். இவ்வாறு இறைவனும் இறைவியும் தங்களின் திருமேனிகளை தாமே தேர்ந்தெடுத்த சிறப்பு மிக்கது இத்திருத்தலமாகும்.

தீர்த்தம் - சிறப்பு:

தீர்த்தங்களில் சிறந்தது கடல் தீர்த்தம், புண்ணிய நதிகள் அனைத்தும் கடலில் கலப்பதால் இதை மகா தீர்த்தம் என்பர். தீர்த்தத்தில் சிறந்த கடல் தீர்த்தமே இத்திருக்கோவிலுக்கு தீர்த்தமாக உள்ளது. அதிலும் குறிப்பாக கங்கை நதி கலக்கும் வங்கக்கடல் தீர்த்தமாக அமையப்பெற்றது மாபெரும் சிறப்பாகும். கங்கை நதி கலப்பதால் வங்கக்கடலைக் கங்கைக்கடல் எனவும் அழைப்பர்.

காசியில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள காசி விசுவநாதர் - விசாலாட்சி ஆலயத்திற்கு கீழ்ப்புறம் தென்வடலாக கங்கை நதி உள்ளது. இங்கும் இந்த ஆலயத்திற்குக் கீழ்ப்புறம் தென்வடலாக கங்கைக்கடல் என்னும் வங்கக்கடல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுங்கையில் தீராடி காசி விசுவநாதரையும் விசாலாட்சியையும் வழிபட்ட பயன் இங்குள்ள கங்கை கலக்கும் வங்கக்கடலில் நீராடி அன்னை முத்தாரம்மனையும் சுவாமி ஞானமூர்த்தீசுவரரையும் வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.

திருக்கோவில் அமைப்பு:

அன்னை முத்தாரம்மன், சுவாமி ஞானமூர்த்தீசுவரரோடு வடதிசை நோக்கி அமர்ந்து அருள் பாலிக்கின்றாள். அன்னையின் ஆலயம் மூன்று மண்டபங்களை உள்ளடக்கிச் சுற்றிலும் பிரகார மண்டபத்துடன் விளங்குகிறது. கர்ப்ப கிரகத்தில் சுவாமி அம்பாள் இருவரும் சுயம்பு மூர்த்திகளாக விளங்குகின்றனர். அம்பாள் திருத்தலையில் ஞானமுடி சூடி, கண்களில் கண்மலர் அணிந்து, வீரப்பல் புனைந்து, கழுத்தில் தாலிப்பொட்டும் மூக்கில் புல்லாக்கும் மூக்குத்தியும் தரித்து அழகுத் திருமேனியோடு விளங்குகின்றாள். அன்னை முத்தாரம்மனுக்கு நான்கு திருக்கைகளும், வலப்புற மேல் திருக்கையில் உடுக்கையும் - கீழ்த்திருக்கையில் திரிசூலமும் உள்ளன. இடம்புற மேல் திருக்கையில் நாகபாசமும், கீழ்த் திருக்கையில் திருநீற்றுக் கொப்பரையும் தாங்கியுள்ளாள்.

சுவாமி ஞானமூர்த்தீசுவரருக்கு இரண்டு திருக்கைகள் மட்டுமே உள்ளன. வலப்புற திருக்கரத்தில் செங்கோல் தாங்கியுள்ளார். இடப்புறத் திருக்கையில் திருநீற்றுக் கொப்பரை ஏந்தியுள்ளார்.

அம்பாள் வலது திருவடியை மடக்கி இடது தொடையில் வைத்த நிலையிலும், சுவாமி இடது திருவடியை மடக்கி வலது தொடையில் வைத்த நிலையிலும் கருணை வெள்ளமாகிய ஞானபீடத்தில் அமர்ந்துள்ளனர். இத்திருமேனிகள் பிற்காலத்தில் நிறுவப்பட்டவை ஆகும். இத்திருமேனிகளுக்கு முன்னிலையில் சுவாமி அம்பாள் திருமேனிகள் சிறிய அளவில் உள்ளன.

கர்ப்பகிரகத்தினை அடுத்து அர்த்தமண்டபமும் அதனை அடுத்து மகாமண்டபமும் உள்ளன. இம்மகாமண்டபத்தில் பேச்சியம்மன், கருப்பசுவாமி, பைரவர் ஆகியோர் திருமேனி கொண்டுள்ளனர். மகாமண்டபத்தின் வலப்பக்கம் பேச்சியம்மனும், இடப்பக்கம் கருப்பசாமியும் வடதிசை நோக்கியுள்ளனர். பைரவர் தெற்குமுகமாக சன்னதியை எதிர்நோக்கி நிற்கிறார்.

மகாமண்டபத்தினை அடுத்து கொடிமர மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தின் நடுவில் 32 அடி உயரக் கொடிமரம் செப்புத் தகடுகளால் வேயப்பட்டுக் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது. கொடிமரத்தின் அடிப்புறச் செப்புத் தகட்டில் வடபுறம் சுவாமியும் அம்பாளும், தென்புறம் அஸ்திர தேவரும் கீழ்ப்புறம் விநாயகரும், மேற்குப் பகுதியில் பாலசுப்பிரமணியரும் திருவுருவம் தாங்கி உள்ளனர். இம்மண்டபத்தின் கன்னிமூலையில் மகா வல்லப விநாயகர் கிழக்குத்திசை நோக்கியும், தென்புறத்தில் இரு பூதத்தார்களும் திருமேனி கொண்டுள்ளனர்.

இத்திருக்கோவிலுடன் இணைந்த அருள்மிகு சிதம்பரேசுவரர் திருக்கோவில் குலசேகரன்பட்டினத்தில் வங்கக்கடல் அலைகள் முத்தமிடும் அழகிய கடற்கரைப் பக்கத்தில் கடற்கரை நோக்கி அமைந்துள்ளது. சிவகாமி அம்பாள் உடனாய சிதம்பரேசுவரரைத் தரிசிக்கும் போது தில்லையில் நடனமாடும் நடராச பெருமானைத் தரிசித்துக் கிடைக்கும் பலன் கிடைக்கும் என்று இம்மூர்த்தியின் பெருமையை உணர்ந்தவர்கள் கூறுகின்றனர்.

இத்திருக்கோவிலுடன் இணைந்த அருள்மிகு விண்ணவரம் பெருமாள் திருக்கோவில் குலசேகரன்பட்டினம் ஊருக்கு வடக்கு எல்லையில் அமைந்துள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி உடனோடு அமர்ந்திருந்து விண்ணவரம் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.

ஆலய வழிபாடும் விழாக்களும்:

நாள் வழிபாடு: இத்திருக்கோவிலில் தினசரி 4 கால பூசை நடைபெறுகிறது.முற்பகலில் காலசந்தியும், பகலில் உச்சிக்காலப் பூசையும், மாலையில் சாயரட்சை பூசையும், இரவில் இராக்காலப் பூசையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

வார வழிபாடு: பிரதி செவ்வாய் தோறும் சிறப்புப் பூசை நடைபெறுகிறது.பிரதி வெள்ளி தோறும் முற்பகல் 10.30 மணி முதல் 12.00 மணி வரை இராகுகால வழிபாடு மகளிரால் நடத்தப்படுகிறது.

மாத வழிபாடு: தமிழ்மாதக் கடைசிச் செவ்வாய் தோறும் மாதாந்திர விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய இரவில் அன்னை முத்தாரம்மன் திருத்தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றாள். பௌர்ணமி தோறும் திருவிளக்கு வழிபாடு நடைபெறுகிறது. திருவிளக்கு வழிபாட்டில் மகளிர் 108 நபர்கள் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெறுகின்றனர்.

ஆண்டு வழிபாடு: சித்திரை மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் வருஷாபிஷேகம் சிறப்பாக நடைபெறுகிறது. அன்றைய தினம் அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு இரவில் அன்னை திருத்தேரில் திருவீதியுலா எழுந்தருளுகின்றாள்.

மாத விழாக்களும், பெருவிழாவும்: தமிழ்ப்புத்தாண்டு (சித்திரை விசு) அன்று சிறப்பு வழிபாடுகளும் அலங்காரத் தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. ஆடிமாதம் மூன்றாம் செவ்வாய்க்கிழமை கொடை விழா கொண்டாடப்படுகிறது. ஆடி மாதம் இரண்டாம் செவ்வாய் இரவில் முளை இடும் விழாவும், அதனைத் தொடர்ந்து திங்களில் மாக்காப்பும், செவ்வாயில் கொடை விழாவும், புதனில் மஞ்சள் நீராட்டு விழாவும் நடை பெறுகின்றன.

ஆவணி விநாயகர் சதுர்த்தி உற்சவமும், இங்குச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

தசரா பெருவிழா

ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவது பாரம்பரிய வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா நாளை மறுநாள் (அக்டோபர் 3) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

Read Entire Article