புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
எடப்பாடி பழனிசாமி எப்போதும் பகல் கனவு கண்டு கொண்டிருப்பவர்; அவருடன் கூட்டணி போவதற்கு யாரும் தயாராக இல்லை. தேமுதிக மட்டும்தான் உள்ளது; அவர்கள் கழன்றுவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை தனி மரம் தோப்பாகாது; எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது.
விசிக தலைவர் திருமாவளவன் திமுக கூட்டணியை விட்டு நிச்சயம் செல்லமாட்டார். 2026 தேர்தலில் இதே நிலையில் கூட்டணி நீடிக்கும். திமுக மீண்டும் வெற்றிபெற்று 2-வது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆவார். கூட்டணியை பிரிக்க முயலும் சிலரின் சதி வேலைகளில் நாங்கள் சிக்க மாட்டோம்.
எங்களுடன் கூட்டணியில் இருப்பவர்கள் நட்போடும் பாசத்தோடும் உள்ளவர்கள்; ஆதலால் சதி வேலைகளில் சிக்கமாட்டார்கள். 2026 தேர்தலில் இதே நிலையில் திமுக கூட்டணி நீடிக்கும். திருமாவளவனும் கூட்டணியில் நீடிப்பார்; எந்த வகையிலும் 2026 களம் மாறாது. கூட்டணி ஆட்சி அமையும் என்ற அன்புமணியின் பகல் கனவிற்கு நாங்கள் பொறுப்பல்ல. விஜய் கட்சி தொடங்கியதால் எங்களுக்கு பதற்றம் இல்லை; அவரை கண்டு நாங்கள் பயப்படவில்லை; எங்களுக்கு கவலையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.