திருமலை,
திருமலையில் உள்ள அமைனிட்டி காம்ப்ளக்ஸ் 2-ல் மாதவ நிலையம் உள்ளது. அங்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அங்கு ஒரு பக்தருக்கு வழங்கப்பட்ட அன்னப்பிரசாதத்தில் பூரான் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அப்படி ஏதும் இல்லை என அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
அன்னப்பிரசாதத்தில் பூரான் கிடந்ததாக பக்தர் ஒருவர் கூறிய குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது. ஏழுமலையானை தரிசிக்க வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு வழங்குவதற்காக திருப்பதி தேவஸ்தானம் அதிக அளவில் சூடாக அன்னப்பிரசாதத்தை தயார் செய்கிறது. அதிக சூட்டிலும் பூரான் இருந்ததாக பக்தர் குறிப்பிட்டது ஆச்சரியமாக உள்ளது.
வெள்ைள சாதத்துடன் தயிரை சேர்ப்பதாக இருந்தால், முதலில் சூடாக்கிய சாதத்தை நன்றாகக் கலந்து, பிறகு தயிர் சேர்க்கிறார்கள். அவ்வாறான நிலையில், பூரான் அப்படியே இருப்பது முற்றிலும் திட்டமிட்ட செயல் என்று தான் கருத வேண்டும். இது போன்ற பொய்யான செய்திகளை பக்தர்கள் நம்ப வேண்டாம் என திருமலை-திருப்பதி தேவஸ்தானம் கேட்டுக்கொள்கிறது.