திருமயம்,பிப்.12: திருமயம் அருகே கிராம மக்கள் சமுதாய பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஊனையூர் வன்னியுலந்தான்வயல் கிராமத்தில் ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் சமுதாய பொங்கல் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் தை மாதம் மூன்றாம் தேதி நடைபெறும் சமுதாயப் பொங்கல் கடந்த மாதம் சில காரணங்களால் நடத்த முடியவில்லை. இதனை தொடர்ந்து சமுதாய பொங்கல் நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக பொங்கலிடும் ஆலடி கருப்பர் பொங்கல் கொள்ளையில் 30 பானைகளில் பொங்கல் வைக்க அடுப்புகள் அமைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் பானைகள் வைத்து பொங்கலிட்டு மக்கள் உற்சாகமடைந்தனர். பின்னர் அனைத்து பானைகளில் உள்ள பொங்கல்களும் ஒரே இடத்தில் படையலிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொங்கல் கிராம மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இவ்வாறு செய்வதன் மூலம் ஆண்டுதோறும் நல்ல மழை பெய்து விவசாயம் செழித்து குடும்பத்தில் உள்ள அனைவரும் நோய் நொடியின்றி ஒற்றுமையாக வாழ கடவுள் அருள் புரிவார் என அப்பகுதி மக்களின் நீண்ட நாள் நம்பிக்கையாக உள்ளது.
The post திருமயம் அருகே கிராம மக்கள் சமுதாய பொங்கலிட்டு வழிபாடு appeared first on Dinakaran.