
திருமண யோகம் என்பது எல்லோருக்கும் சரியான நேரத்தில் வாய்ப்பதில்லை. வேலை, குடும்ப சூழ்நிலை, வருமானம் போன்ற சமூக காரணிகளால் திருமணம் தள்ளிப்போவது இயல்பு. தொடர்ந்து திருமணம் தள்ளிப்போவதால் சிலர் விரக்தி அடைகின்றனர். எனவே, பெரும்பாலானோர் ஜாதகம் பார்க்கும்போது திருமண ப்ராப்தம் இருக்கிறதா? என்பதை முதலில் கேட்டு தெளிவுபெறுகின்றனர்.
திருமணம் நடப்பதற்கும் ப்ராப்தம் அதாவது கொடுப்பினை இருந்தால்தான் நடக்கும். சொந்த வீடு அமைவது, நல்ல வேலை கிடைப்பது, நல்ல பிள்ளை அமைவது, செல்வம் சேருவது போன்று எண்ணற்ற விசயங்களுக்கு இந்த ப்ராப்தம் என்ற சொல்லை பயன்படுத்துகிறோம்.
திருமணம் நடப்பதற்கான கிரக அமைப்பு
ஒரு ஜாதகருக்கு திருமணம் நடக்க வேண்டுமானால் நிச்சயம் அவரது ஜாதகத்தில் திருமணத்திற்குண்டான கிரக அமைப்புகள் இருக்கவேண்டும். திருமண அமைப்புகளுக்கான கிரக அமைப்புகள் என்னவென்றால் அவர்கள் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் நன்கு வலுப்பெறுதல் அவசியம். அதாவது ஆட்சியோ உச்சமோ அல்லது கேந்திரத்திலோ அல்லது திரிகோண ஸ்தானத்திலோ இருந்து அந்த இடத்தை குரு பார்த்தல் மிக சிறப்பு.
மேலும் குடும்ப ஸ்தானம் நன்கு வலுப்பெறுதல் அவசியம். அதாவது ஆட்சியோ உச்சமோ அல்லது கேந்திரத்திலோ அல்லது திரிகோண ஸ்தானத்திலோ இருந்து சுபர் பார்வை பெறுவது நல்லது. களத்திர காரகனான சுக்கிரன் நல்ல நிலையில் அதாவது தன் சொந்த வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ அமர்ந்து அந்த ஸ்தானம் கேந்திர ஸ்தானமாகவோ அல்லது திரிகோண ஸ்தானமாகவோ இருந்து சுபர் சேர்க்கை பெற்றிருந்தால் நிச்சயம் அவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும்.
அதேசமயம், களத்திர ஸ்தானத்தைக் கொண்டு மட்டும் திருமணம் நடக்கும் என்றும் கணக்கிட முடியாது. அதன் அதிபதி எங்கே இருக்கின்றார் என்பதையும் பார்க்க வேண்டும். திருமண தோஷம் ஏதேனும் உள்ளதா மற்றும் பாப கிரகங்களின் நிலை எப்படி உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். அவர்களின் ஆயுள் பலம் எப்படி உள்ளது என்பதையும் பார்க்க வேண்டும். மற்ற கிரகங்களின் அமைப்பையும் மற்றும் அவரவர்கள் இருக்கும் நட்சத்திரச் சாரம் மற்றும் நவாம்சம் போன்ற அமைப்பையும் நன்கு ஆராய்ந்து, அதன்பிறகே திருமண யோகம் இருக்கிறதா என்பதை தீர்மானிக்க வேண்டும்.
கட்டுரையாளர்: திருமதி ந.ஞானரதம்,
செல்: 9381090389