
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள காகரலா கிராமத்தை சேர்ந்தவர் ரோஹித் (26). நேற்று மாலை குடும்பத்துடன் ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால் தனது மனைவி பார்வதியை தயாராகும்படி சொல்லியிருந்தார். ஆனால் அவர் வெளியே சென்று அதிகமாக குடிபோதையில் இருந்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மனமுடைந்த பார்வதி வீட்டின் கூரையில் உள்ள ஒரு தாழ்ப்பாளில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் மனைவி இறந்ததை அறிந்த ரோஹித், மிர்சாபூர் பேலா ரெயில் நிலையம் அருகே ரெயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.