சொர்ணபுரி என்று அழைக்கப்பட்ட அந்தத் தலம், நல்லாத்தூர் என பின்னாளில் வழங்கப்பட்டது. நல்லோர்கள் நிறைந்ததாலும், ஆறுகள் பாய்ந்து வளமுற்றதாலும், வரதராஜனும், ஸ்ரீராம பாதமும் அமைந்து அருகே வருவோரை ஆற்றுப்படுத்தியதாலும் நல்லாத்தூர் எனப் பெயர் பெற்றதாக கூறுகின்றனர். ஆதியில் அமைந்த வரதராஜர் காலத்தினால் மறைந்தாலும், பின்னர் வந்த சோழ ராஜாக்களால் அர்ச்சாவதார மூர்த்தியாக பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்த காலங்களில் வரதராஜர் காஞ்சியில் தோன்றிய புராணங்களை அனுதினமும் படித்தும், கேட்டும், முடிந்தவர்கள் நேரே தரிசித்தும் வருவார்கள். எப்பேற்பட்டவன் வரதன்…. எத்தனை பேரருளாளன் வரதராஜன்… வரம் கொடுக்கும்
கருணையை தனது திருநாமமாகக் கொண்டருளும் பெருமாளல்லவா அவன் என்று வியப்பின் உச்சிக்கே செல்வர். இப்படிப்பட்ட வரதனை தான் தினமும் சென்று காணவேண்டுமே என நல்லாத்தூரிலுள்ளவர்கள் ஆலயம் அமைத்தனர். அதுவும் வரதனின் அருள் விளையாட்டே தவிர வேறொன்றுமில்லை. இப்படித்தான் புராண நிகழ்வுப்படியும், அதன் தொடர்ச்சியாக பக்தர்கள் காதலாகிக் கதறியும் அவன் கருணையினால் வரதராஜனுக்கு கோயில் கட்டி சிம்மாசனத்தில் அமர்த்தி அழகு பார்த்தனர். உரைக்கவல்லாருக்கும் நினைக்கவல்லாருக்கும் வைகுண்டம் ஆகும் தம்மூரெல்லாம் என்று ஆன்றோர்கள் கூற்றுப்படி வரதனை அமர்த்தினர். ஏனெனில் காலமும், இறைவனும் எதையும் காரணமில்லாது செய்வதில்லை.
நல்லாத்தூர் எனும் இத்தலம் கடலூருக்கு அருகிலுள்ள திருவஹீந்திரபுரம் எனும் திருவந்திபுரத்தினுடைய அபிபானத்தலம் எனும் ஏற்றமும் இக்கோயிலுக்கு உண்டு. அபிமானத் தலங்கள் பெறும் சிறப்புகள் கணக்கிலடங்கா. திருவஹீந்திரபுரத்திற்கு வரும் ஆச்சார்யார்களும், ஆழ்வார்களும் மிகவும் மகிழ்ந்து அபிமானித்து தான் மிகவும் விரும்பும் ஓர் தலம் என்றும், இத்தல பெருமாள்மீது தனக்குள்ள அன்பை அந்தரங்கமாக காட்டிக்கொள்ளும் பெருமையும் பெற்றவை. அதுபோல ஸ்வாமி தேசிகர் மற்றும் திருமங்கையாழ்வாரின் விக்ரக மூர்த்திகளை இங்கு எழுந்தருளச் செய்துள்ளனர். ஆகவே, நிச்சயம் இவ்விரு ஆழ்வார், ஆச்சார்யாரும் இத்தலத்திற்கு வந்து சென்றிருப்பர் என்று அறுதியிட்டுக் கூறலாம். அதுபோல, திருவஹீந்திரபுரத்திலிருந்துதான் அக்காலத்தில் இக்கோயிலுக்கான உற்சவமூர்த்திகள் கொண்டுவரப்பட்டிருக்கும். அதாவது, அபிமான தலத்தின் உற்சவமூர்த்திகள் மூல திவ்யதேசத்தின் சாந்நித்தியத்தை தாங்கி அபிமான தலங்களில் எழுந்தருளச் செய்திருப்பது பல கோயில்களில் வழக்கம். இப்பேற்பட்ட பெருமைகொண்ட நல்லாத்தூர் ஸ்ரீலஷ்மி நாராயண வரதராஜ பெருமாளை தரிசிப்போமா. நல்லாத்தூர் இயற்கை அன்னை தாலாட்டும் செழிப்பு மிக்க செல்ல பூமி. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை வண்ணம் பூசி பூமித்தாய் பளிச்சென்று இருக்கிறாள். இதமான அமைதி எப்போதும் சூழ்ந்திருக்க பூஞ்சோலைகள் சுற்றிலுமிருக்க மையமாக அமைந்துள்ளது வரதராஜர் ஆலயம். சிறிய ஆலயம்தான். ஆனால், சக்தியிலும், கீர்த்தியிலும் இணையற்ற கோயில். கொடிமரத்திலிருந்து நேரே பார்க்க சற்று உள்ளுக்குள் மூலவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜராக அருள்பாலிக்கிறார்.
கோயில் கருவறை வரை சாதாரணாக இருக்கும் மனம் கருவறையை நெருங்கியவுடனே பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுகிறது. வரத மூர்த்தத்தின் அதிர்வுகள் சட்டென்று தாக்கி நம்மை நிலைகுலைய வைக்கிறது. அந்த பச்சைக் கற்பூர வாசமும், துளசியின் மணமும் நாசியை நெருட, வரதனின் சாந்நித்திய பலம் இருதயம் தாண்டி உயிரின் மையத்தையே அசைத்துப் பார்க்கிறது. நெடிதுயர்ந்து நின்றகோலத்தில் சேவை சாதிக்கும் வரதராஜரை பார்க்க பிரமிப்பும், மலையைப் பார்த்து வியந்து நிற்கும் பாலகன்போல் ஓர் உணர்வு உடலெங்கும் பெருக்கெடுத்தோடுகிறது. அபய வரத ஹஸ்தத்தோடு அருள்பாலிக்கிறான், அதைக் காண கவலைகள் கரைகின்றன. மூலவருக்கு அருகிலேயே ஸ்ரீதேவி, பூதேவியும் வரதனுக்கு இணையாக நின்று அருள்பாலிக்கிறார்கள். கேட்க வேண்டிய பிரார்த்தனைகள் சந்நதியை தரிசித்த திகைப்பில் மறந்தாலும், வரதராஜர் தானாக வேண்டியதை நமக்குச் சேர்த்துவிடுகிறார். உற்சவமூர்த்திகளின் அழகை வர்ணிக்க இயலாது. விசேஷ நாட்களில் பூக்களின் மத்தியில் அவர் வீற்றிருக்கும் கோலத்தை நாள் முழுதும் காணலாம்.
மூலவருக்கு முன்புறமே லஷ்மி நாராயணரின் மிகப் பழமையான சிலை ஒன்று உள்ளது. இது ராமரின், சீதையும் வந்து சென்றதற்கான ஆதாரச் சிலை. வைகுண்டத்திற்கு ஏகும் முன்பு எல்லோருக்கும் காட்சி தந்த கோலம். குலோத்துங்கச் சோழன் காலத்தில் எடுப்பிக்கப்பட்ட கருவறை என்றும், லஷ்மி நாராயணருக்கு கொடுத்த சில நிவந்தங்கள் பற்றிய கல்வெட்டும் இங்கு உள்ளதாகச் சொல்கிறார்கள். அர்த்த மண்டபத்தில் திரிபங்கி ராமர் எனும் திருநாமத்தோடு காட்சி தருகிறார். முழங்கால், இடுப்பு, கழுத்து எனும் மூன்று இடங்களையும் சற்றே ஒயிலாக வளைத்து பேரழகராக ஜொலிக்கிறார் ஸ்ரீராமர். விநய ஆஞ்சநேயர் ஸ்ரீராமருக்கு அருகே அமர்ந்து இடது கையில் ராமரின் சூரிய வம்ச கொடியை ஏந்தியும், வலது கையால் வாய்மூடி பணிவாக இருக்கிறார். காணக் காண வியப்பும் களிப்பும் அதிகரிக்கிறது.
இக்கோயிலின் பிரதான விஷயமே இதுவொரு திருமண பாக்கியத்தை அளிக்கும் தலம் என்பதுதான். ஒவ்வொரு வருடமும் போகிப்பண்டிகையன்று ஆண்டாள் கல்யாணம் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கில் மாலைகளும், மக்களுமாக கூடிவிடுவர். ஸ்ரீவில்லிபுத்தூரில் பெருமாளுக்கு ஆசையோடு மாலையிட்டவள், இங்கு தம்மைபோல் காத்திருக்கும் திருமணமாகாத பக்தர்களுக்கு ஆசையோடு மாலையை ஆசியோடு தருகிறாள். மாலையை பெற்றுச் சென்றவர்கள் வெகு விரைவில் திருமணமாகி வந்து கண்களில் நீர் பெருக வணங்கிச் செல்வது இங்கு சகஜமாக உள்ளது. அதேபோல இந்த நாள் மட்டுமல்லாது ஒவ்வொரு வருடமும் நிகழ்ந்தேறும் சீதா கல்யாணத்தின்போது ராமர், சீதை காப்பு கயிறு கட்டிச் சென்றால் திருமண பாக்கியம் கிட்டுகிறது. குறிப்பிட்ட நாளில் செல்ல முடியாதவர்கள் அன்போடு வரதனை தரிசிக்கச் சென்றால் கூட போதும். பூமாலையை அவனின் திருமேனியில் சாற்றி விட்டால் கூடப் போதும் உங்களின் திருமணத்தை வெகு சீக்கிரம் அவன் நிச்சயத்து விடுகிறான்.
தரிசனமே தனித்த பலனை அளித்து விடுகிறது. விசேஷ நாட்களில் சொல்லத்தான் வேண்டுமோ! கருவறையிலிருந்து அர்த்தமண்டபம் வந்து பிராகாரத்திலுள்ள தாயார் சந்நதியை சேவிக்கிறோம். பெருந்தேவித் தாயார் எனும் திருநாமம் பூண்டு பேரழகாக அமர்ந்திருக்கிறாள். எல்லோரையும் காத்தருளும் ஆதி மாதாவானதாலும், கருணை புரிவதில் இவளுக்கு இணை இவளே என்பதாலும், இவளுக்கு பெரியவள் எவருமில்லை என்பதாலேயே பெருந்தேவி தாயார் எனும் திருப்பெயரைக் கொண்டிருக்கிறாள் போலும். வரதனை மணந்த நாணம் முகமெங்கும் பரவியிருக்கிறது. அருகேயே கெஜலஷ்மி சகல செல்வங்களையும் தமது திருக்கண் பார்வையிலேயே கடாட்சித்து விடும் வல்லமை பெற்றவள். கெஜலட்சுமியை தினமும் தரிசிக்க கடன்கள் தீரும் என்பது மூத்தோர் வாக்கு. பிராகாரமாக வலம் வந்தால் துர்க்கை ஆச்சரியமாக தனிச் சந்நதியில் வீற்றிருக்கிறாள். கருடாழ்வார் உடலில் எட்டு நாகங்களோடு காட்சி தருகிறார். ஸ்வாதியில் திருமஞ்சனம் செய்விக்கின்றனர். கோயிலை வலம் வந்து கொடிமரத்தின் முன்பு வீழ்ந்து பரவ வரதன் வேண்டும் வரங்களை வாரி இறைத்து விடுகிறான். நல்லாத்தூர் எனும் இத்தலத்திற்கு புதுச்சேரியிலிருந்தும், விழுப்புரம் மற்றும் கடலூரிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன. பாண்டி – கடலூர் வழியில் தவளகுப்பத்திலிருந்து 7 கி.மீ. தொலைவும், பாண்டி&விழுப்புரம் வழியில் அரியூரிலிருந்து 3 கி.மீ. தூரத்திலும் உள்ளது.
The post திருமண வரமருளும் நல்லாத்தூர் பெருமாள்!! appeared first on Dinakaran.