ஒரு ஜாதகத்தின் வலிமையான இடங்களில் ஒன்று ஐந்தாம் இடம். இதை “பூர்வ புண்ணிய ஸ்தானம்” என்று சொல்வார்கள். இந்த உலகத்திலே நன்மை தீமைகளை அனுபவிக்க வேண்டும் என்று சொன்னால் பூர்வ புண்ணியம் இருந்தால்தானே முடியும்.
ஜாதகத்தை எழுதும்போது ‘‘பதவி பூர்வ புண்ணியானாம்” என்ற வாக்கியத்தை எழுதித்தான் ஜாதகத்தை குறிக்கிறோம்.
திரிகோண ஸ்தானங்களில் மத்திம திரிகோண ஸ்தானம் இது. எந்த ஜாதகத்திலும் திரிகோணங்கள் வலிமை பெற்று விட்டால் அந்த ஜாதகம் வலிமை பெற்ற ஜாதகமாக ஆகிவிடும். மற்ற கிரகங்களினால் ஏற்படுகின்ற அத்தனை தோஷங்களையும் இந்த திரிகோண வலிமையானது வென்று விடும்.
மனித வாழ்க்கையை முழுமையடையச் செய்யும் பாவங்களில் ஒன்று இது. காரணம் இதுதான் சந்ததி விருத்தியைக் குறிக்கிறது. குலதெய்வத்தைக் குறிக்கிறது. விருப்பங்கள் நிறைவேறுமா? நிறைவேறாதா? என்பதைக் குறிக்கிறது.
ஐந்தாம் பாவத்தின் ஐந்தாம் பாவமான ஒன்பதாம் பாவத்தை பாக்கிய ஸ்தானம் என்று சொல்வார்கள் அந்த பாக்கிய ஸ்தானத்திற்கு பாக்கிய ஸ்தானமாக (பாவத் பாவ விதி) அமைவதுதான் ஐந்தாம் பாவம்.
சாதக அலங்காரம் என்கின்ற நூலில் ஒரு விஷயம் சொல்லப்படுகிறது ஒருவனுடைய லக்னாதிபதியுடன் ஐந்துக்கு உடையவன் சேர்ந்தாலும் பார்த்தாலும் ஒருவர் வீட்டில் ஒருவர் மாறி நின்றாலும் அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் பெருமை படைத்த பிள்ளைகளாகப் பிறப்பார்கள் அந்தப் பிள்ளைகளுக்கு ஆயுள் தோஷமும் இருக்காது.
ஐந்தாம் பாவத்தில் இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன லக்னத்தை விட ஐந்தாம் பாவம் சிறப்பான பலனைத் தரும். ஒரு ஜாதகரின் தனித்தன்மையை உயர்த்தும். ஒருவருடைய அறிவு, சந்தோஷம், ஆளுமை, விளையாட்டு, கலைகளில் ஆர்வம், செல்வங்கள் தேடி வருதல், காதல் உணர்வுகள், எதையுமே உணர்வுப் பூர்வமாக அணுகுதல், கற்பனை, இவைகள் எல்லாம் ஐந்தாம் பாவத்தின் சிறப்புகள்.
ஐந்தாம் பாவம் என்பது மனத்தைக் குறிப்பது. மனதில் எழும் விருப் பத்தைக் குறிப்பது. அதனால் தான் ஐந்தாம் பாவம் ஏழாம் பாவத்தோடும் லக்னத்தோடும் சம்பந்தப்பட்டு இருந்தால் அவர்கள் காதல் திருமணம் செய்து கொள்வார்கள் என்று சொல்வார்கள். ஆனால், இதை வைத்துக்கொண்டு அவ்வளவு நிச்சயமாகச் சொல்லிவிட முடியாது. பெற்றோர்கள் பார்த்துச் செய்து வைத்த திருமணத்திற்குப் பின்னால், அன்னியோன்யமான தம்பதிகளாக இருக்கும் ஜாதகத்தில், இந்த ஒன்று, ஐந்து, ஏழாம் பாவங்கள் சம்பந்தப்பட்டு இருப்பதைப் பார்த்திருக்கின்றேன்.
இருவர் ஜாதகங்களிலும் ஐந்தாம் பாவம் அல்லது ஐந்தாம் பாவத்தின் அதிபதி நட்பாக இருந்திருந்தால், பெண் பார்க்கப் போகும் பொழுதே பார்த்தவுடன் பிடித்து விடும் அடுத்து இன்னொரு இடத்தில் பெண் பார்க்கவோ இன்னொரு மாப்பிள்ளை பார்க்கவோ விரும்ப மாட்டார்கள். இதைத்தான் மனப்பொருத்தம் என்று சொன்னார்கள். இந்த மனப் பொருத்தம் இருந்துவிட்டால் மற்ற பொருத்தங்களைப் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது.
பல பேர் என்னிடம் ‘‘இப்பொழுது விழுந்து விழுந்து திருமணப் பொருத்தம் பார்க்கிறார்களே, இது எத்தனை காலமாக இருக்கிறது? என்று கேட்கிறார்கள்.
எனக்குத் தெரிந்து ஒரு 50 ,60 வருடங்களாகத்தான் இந்தத் திருமணப் பொருத்தம் பார்ப்பது என்பது இருக்கிறது. என்னுடைய தந்தையாருக்கும் தாயாருக்கும் ஜாதகமே இல்லை. அதைப்போல பல தம்பதிகளை நான் பார்த்திருக்கின்றேன். அவர்கள் ஜாதகம் இல்லாமலேயே மனப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து அற்புதமாக வாழ்ந்திருக்கிறார்கள்.
ஒன்றாம் பாவம், மூன்றாம் பாவம், ஐந்தாம் பாவம், ஏழாம் பாவம், ஒன்பதாம் பாவம், பதினோராம் பாவம், இவைகள் ஒன்றுக்கொன்று மூன்றாம் பாவங்களாக, சுழற்சி முறையில் அமையும். இவைகள் அனைத்தும் ஒன்றை ஒன்று வளர்க்கின்ற பாவங்கள். ஏழாம் பாவம் திருமணத்தைக் குறிக்கிறது. ஆறாம் பாவம் திருமணத்தைத் தடுக்கிறது. இது பொது விதி.. காரணம் ஏழாம் பாவத்துக்கு 12-ஆம் பாவமாக ஆறாம் பாவம் அமைகிறது. இப்பொழுது ஐந்தாம் பாவம் வலுப்பெற்று விட்டால் ஆறாம் பாவத்தின் காரகங்களில் ஒன்றான திருமண விருப்பமின்மையை உடைத்து ஐந்தாம் பாவம் ஏழாம் பாவத்தை இயக்கி திருமண விருப்பத்தைக் கொடுத்து திருமணத்தைச் செய்து வைத்து விடும் இங்கே ஆறாம் பாவம் எத்தனை வலிமையாக இருந்தாலும் செயல்படாது. காரணம் ஆறாம் பாவத்தின் 12 ஆம் பாவமாக ஐந்தாம் பாவம் செயல்படும்.
ஏழாம் இடம் திருமணம். அந்த ஏழாம் இடத்திற்கு லாப ஸ்தானமாக (அதாவது 11-ஆம் இடமாக) ஐந்தாம் பாவம் அமைவதை நீங்கள் கவனித்தால் ஐந்தாம் பாவத்தின் வலிமையைத் தெரிந்து கொள்ள முடியும். எனவே, ஒரு ஜாதகத்தில், ஐந்தாம் பாவம் வலிமை பெற்றுவிட்டால், மற்ற பாவங்கள் தடுத்தாலும், அவருக்கு திருமண அமைப்பு உண்டு என்பதைத் தெரிந்து கொள்ளலாம் இன்னொன்று அவருக்கு சந்ததி விருத்தியும் உண்டு என்றால் திருமணம் நடந்து தானே ஆக வேண்டும்.
இப்பொழுது ஒரு கணவன் – மனைவி ஜாதகத்தைச் சொல்லுகின்றேன். கணவன் கும்ப லக்னம். லக்னத்துக்கு ஐந்தாம் இடம் மனம், விருப்பம் இவற்றைக் குறிப்பது. கும்பத்துக்கு ஐந்தாம் இடம் மிதுனம். அதிபதி புதன். ஏழாம் இடம் களத்திரம். அதிபதி சூரியன். ஐந்தாம் இடத்து அதிபதியும் ஏழாம் இடத்து அதிபதியும் இணைந்து கும்ப லக்கினத்தில் இருக்கிறார்கள். ஐந்து ஏழுக்கு உடையவர்கள் இணைந்து ஏழாம் இடத்தைப் பார்க்கின்ற ஜாதகம். ஒன்று, ஐந்து, ஏழு வலிமையாக இணைந்திருக்கின்றன. காதல் திருமணமா என்றால் இல்லை. பெற்றோர்கள் நிச்சயித்த திருமணம்தான். திருமணமாகி 37 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்பொழுது மனைவியின் ஜாதகத்தைப் பார்ப்போம். அவரும் கும்ப லக்கனம். ஐந்தாம் இடத்து அதிபதி புதன் ஏழாம் இடத்து அதிபதி சூரியன். இவர்கள் இருவரும் இணைந்து ஐந்தாம் இடத்தில் இருக்கின்றார்கள். இப்பொழுது யோசித்துப் பாருங்கள்.
இருவர் ஜாதகங்களிலும் ஐந்தாம் இடம் ஏழாம் இடத்தோடு தொடர்பு கொண்டிருக்கிறது. ஆனால் காதல் திருமணம் அல்ல. இன்றுவரை காதலித்துக் கொண்டிருக்கும் திருமணம் என்று சொல்லலாம்.
இதில் இன்னொரு சிறப்பு. இந்த ஆண் ஒரே ஒரு முறைதான் பெண் பார்ப்பதற்காகச் சென்றிருக்கிறார். அதற்குப் பிறகு வேறு பெண்ணைப் பார்க்கவில்லை முதல் முறை பார்த்த பெண்ணையே திருமணம் முடித்து விட்டார். காரணம் இங்கே ஐந்தாம் இடமாகிய மனம், செயல்பட்டு இருக்கிறது. இதைத்தான் “மனம் போல் வாழ்வு” என்று சொன்னார்கள். ஐந்தாம் இடம் வலிமையானது, ஜாதகத்தின் மற்ற தோஷங்களை எல்லாம் குறைத்து விடும். எனவே திருமண யோகத்தில் ஐந்தாம் இடத்தை முக்கியமாகப் பார்க்க வேண்டும்.
The post திருமண யோகத்தில் ஐந்தாம் இடத்தை முக்கியமாகப் பார்க்க வேண்டும்! appeared first on Dinakaran.