திருமண பொருத்தம் பார்க்கும்போது ஜாதகத்தின் தன்மை குறித்து விளக்கமாக கேட்டு தெளிவு பெறுவதுண்டு. குறிப்பாக, சுத்த ஜாதகத்தை சுத்த ஜாதகத்தோடுதான் சேர்க்கவேண்டுமா? அல்லது வேறு தோஷமுள்ள ஜாதகத்தை சேர்த்தாலும் அவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா? என்றும் கேட்பதுண்டு.
சுத்த ஜாதகம் என்றால் என்ன?
சுத்த ஜாதகம் என்றாலே அவரவர் ஜாதக கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட ஸ்தானங்களில் அதாவது குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம், மாங்கல்ய ஸ்தானம் போன்ற ஸ்தானங்களில் கிரகங்கள் இல்லாமல் இருப்பது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். முக்கியமான தோஷங்கள் இல்லாமல் இருத்தல் போன்ற அம்சத்தை மட்டும் பார்த்துவிட்டு அது சுத்த ஜாதகம் என்று நம்பிவிடுகின்றனர்.
சுத்த ஜாதகம் என்பது மேற்குறிப்பிட்ட ஸ்தானங்களில் வெற்றிடமாக இருப்பது அன்று. காரணம் குடும்ப ஸ்தானாதிபதி பகை அல்லது நீசத்தில் அமர்ந்து இருந்து அந்த குடும்ப ஸ்தானத்தில் கிரகங்கள் இல்லை என்றால் அது சுத்த ஜாதகம் என்பது இல்லை. அந்த இடத்தின் அதிபதி எந்நிலையில் உள்ளார் என்பதையும் பொறுத்துத்தான் நாம் தீர்மானிக்க வேண்டும். அதே போன்று களத்திர ஸ்தானம் மற்றும் மாங்கல்ய ஸ்தானத்தில் கிரகங்கள் இல்லாமல் இருந்தால் மட்டும் போதாது. அந்த அதிபதிகள் மற்றும் அந்த இடத்தினை பார்க்கும் கிரகங்களின் நிலை போன்றவற்றையும் வைத்தே முடிவெடுக்க வேண்டும்.
உதாரண ஜாதகம் 1: இந்த ஜாதக கட்டங்களில் குடும்ப ஸ்தானம் களத்திர ஸ்தானம் மாங்கல்ய ஸ்தானத்தில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதால் இந்த ஜாதகத்தை சுத்த ஜாதகம் என்று நினைக்கின்றார்கள். ஆனால், இந்த ஜாதகத்தை நன்கு கூர்ந்து கவனித்தால் இதில் செவ்வாய் தோஷம் உள்ளதை பார்க்கலாம். ஆதலால், இந்த ஜாதகத்திற்கு செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை இணைக்க வேண்டும். மேலும் செவ்வாய் தோஷம் மட்டும் இல்லாமல் புத்திர தோஷமும் உள்ளது. ஆகவே இந்த ஜாதகத்தை வெறும் மேலோட்டமாக பார்த்தால் இந்த ஜாதகம் சுத்த ஜாதகம் என்கின்றனர்.
உதாரண ஜாதகம் 2: இந்த ஜாதகத்தில், குடும்ப ஸ்தானம் களத்திர ஸ்தானம் மாங்கல்ய ஸ்தானத்தில் பாப கிரகங்களான ராகு, சூரியன், கேது இருப்பதால் இந்த ஜாதகத்தை தோஷமுள்ள ஜாதகம் எனலாம். மேலும் களத்திர ஸ்தானத்தில் நீசம் பெற்ற குரு அமர்ந்துள்ளார். இந்த ஜாதகத்தை நன்கு கூர்ந்து கவனித்தால் இதில் செவ்வாய் தோஷமும் உள்ளது. ஆதலால், இந்த ஜாதகத்திற்கு செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை இணைக்க வேண்டும்.
மேலும் களத்திர காரகன் சுக்கிரன் நீச்சம் பெற்றுள்ளதையும் நாம் இங்கு நன்கு கவனித்தல் வேண்டும். இது மட்டுமல்லாமல் குடும்ப ஸ்தானத்தில் கிரகண தோஷமும் இருக்கின்றது. ஆகவே, இதுபோன்ற ஜாதகதாரர்களுக்கு நன்கு பொருத்தம் பார்த்துத்தான் திருமணம் செய்வது நல்லது. வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்யக்கூடாது.
மேலும், களத்திர ஸ்தானம், குடும்ப ஸ்தானம், மாங்கல்ய ஸ்தானம் மற்றும் சுக்கிரனின் நிலை அந்த இடத்தின் அதிபதியின் நிலை போன்றவற்றை நன்கு பார்த்து ஆராய வேண்டும். அந்த இடத்தின் மேல் சுபகிரகமான குரு பார்வை உள்ளதா, இல்லையா? அந்த இடத்தில் பாப கிரகங்கள் எந்த நிலையில் உள்ளன? மற்றும் பிற ஸ்தானங்கள் ஆகியவற்றை வைத்து தீர்மானிக்க வேண்டும்.
பொதுவாக ஜாதகத்தில் இரண்டு என்று சொல்லப்படும் குடும்பஸ்தானம், ஏழு என்று சொல்லப்படும் களத்திர ஸ்தானம் மற்றும் எட்டு என்று சொல்லப்படும் மாங்கல்ய ஸ்தானம் போன்றவை திருமண வாழ்க்கைக்கு மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளவை. இந்த மூன்று ஸ்தானங்கள் பொதுவாக சுத்தமாக இருக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுவதை கேட்டிருக்கின்றோம். எப்பொழுதும் மேற்குறிப்பிட்ட ஸ்தானங்கள் காலியாக இருந்தால் மட்டும் போதாது. அந்த ஸ்தானங்களின் நிலை மற்றும் மற்ற மற்ற கிரகங்களின் தன்மையைப் பொறுத்தும் ஜாதகத்தில் தோஷம் உண்டா இல்லையா என்று கூறுதல் வேண்டும். எல்லாவித்திலும் நன்றாக உள்ளதா என்று பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும்.
கட்டுரையாளர்: திருமதி N.ஞானரதம்
செல் 9381090389.