திருமங்கலத்தில் 100 கிலோ காலாவதி இறைச்சி உணவு பொருட்கள் பறிமுதல்: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

3 hours ago 3

திருமங்கலம், மே 15: திருமங்கலம் நகரில் இறைச்சி கடைகளில் சுகாதார துறையினர் நேற்று சோதனை நடத்தினர். இதில் சுமார் 100 கிலோ காலாவதி இறைச்சி மற்றும் உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.

திருமங்கலம் நகரில் உள்ள சில கடைகளில் நாள்பட்ட காலாவதியான இறைச்சி விற்பனை செய்வதாகவும், உணவங்களில் கெட்டுபோன உணவு பொருள்களை விற்பனை செய்வதாகவும் நகராட்சிக்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார் மற்றும் ஆணையாளர் அசோக்குமார் அறிவுறுத்தலின்படி நேற்று நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர் சண்முகவேல் மற்றும் ஆய்வாளர்கள் சிக்கந்தர், வனஜா அடங்கிய குழுவினர், மதுரை ரோட்டில் பல்வேறு இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.

இதில் குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த காலவதியான கோழி மற்றும் ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்தனர். இதே போல் உணவங்களில் கெட்டுப்போன பரோட்டா, சப்பாத்தி, புளித்த தோசை மாவு, வடை முதலியவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் தரமான பொருள்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும்படி அறிவுறுத்தினர்.

மேலும் உணவு பாதுகாப்புத்துறை கூறியபடி ஓட்டல்கள், உணவங்களில் பார்சல் கட்டித்தருவதற்கு பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தக்கூடாது எனவும் வாழை இலைகளை மட்டுமே பயன்படுத்தவேண்டும் எனவும் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட காலவதியான 100 கிலோ இறைச்சி மற்றும் கெட்டுபோன உணவு பொருட்களை நகராட்சிக்கு சொந்தமான நுண்உரக்கூடத்தில் அதிகாரிகள் அழித்தனர்.

The post திருமங்கலத்தில் 100 கிலோ காலாவதி இறைச்சி உணவு பொருட்கள் பறிமுதல்: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article