திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜிக்கும், கவுசிக்காவுக்கும் திருமணம் நேற்று எளிய முறையில் நடந்தது. இதில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டராக உள்ள அருண்ராஜ் பிரபல ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி சமுத்திரபாண்டியனின் மகன் ஆவார். இவருக்கும், மேகநாதன் – ஜெயந்தி தம்பதியரின் மகள் மருத்துவர் கவுசிகாவுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இதையடுத்து, நேற்று (10ம் தேதி) காலை திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜிக்கும், கவுசிகாவுக்கும் திருமணம் நடைபெற்றது. மணமக்களின் குடும்பத்தார் முன்னிலையில் காலை 7 மணிக்கு மணமகள் கவுசிகா கழுத்தில் மணமகன் கலெக்டர் அருண்ராஜ் தாலி கட்டினார். அப்போது சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் வந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
கூடுதல் ஆட்சியர் நாராயணசர்மா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் குமாரவேலு, உதவி ஆணையர்கள் சக்திவேல், ராஜலட்சுமி உள்பட பல்வேறு துறையின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, திருமண விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் காலை உணவு மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் வழங்கப்பட்டது.
மாவட்ட கலெக்டரின் திருமண விழாவையொட்டி, திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இராஜாங்கம் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருமண வரவேற்பு விழா வருகிற 14ம்தேதி மாலை 6 மணிக்கு சென்னை திருவான்மியூரில் உள்ள இராமச்சந்திரா கன்வென்சன் மையத்தில் நடைபெற உள்ளது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
* தை மாதத்தின் கடைசி முகூர்த்தம்
நேற்று தை மாதத்தின் கடைசி முகூர்த்தம் என்பதால் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் மட்டும் 64 திருமணங்கள் நடைபெற்றன. இதுமட்டுமின்றி ஏராளமான திருமண மண்டபங்களிலும் திருமணங்கள் நடைபெற்றன. இதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் திருப்போரூரில் குவிந்தனர். இதனால், நான்கு மாடவீதிகளிலும், ஓ.எம்.ஆர். சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
The post திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் நேற்று எளிய முறையில் நடந்த செங்கல்பட்டு கலெக்டர் திருமணம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் வாழ்த்து appeared first on Dinakaran.