திருப்போரூர் அருகே டாம்ப்கால் மருந்து நிறுவனத்தில் தீ விபத்து

1 month ago 9

Thiruporur, Fire accidentதிருப்போரூர் : திருப்போரூர் அருகே ஆத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் சித்த மருந்துகளை தயாரிக்கும் டாம்ப்கால் நிறுவனத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ₹2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

திருப்போரூர் அருகே ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட தனியார் மற்றும் அரசு ரசாயன மருந்து தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இவ்வளாகத்தில், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சித்த மருந்துகளை தயாரிக்கும் டாம்ப்கால் நிறுவனத்தின் தொழிற்சாலையும் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான சித்த, ஆயுர்வேத மருந்துகள் தயாரிக்கப்பட்டு, விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இத்தொழிற்சாலையில் சுமார் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், டாம்ப்கால் தொழிற்சாலை வளாகத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில் மருந்து கழிவுகளை போட்டு வைத்திருக்கும் பகுதியில் திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கியது. அங்கு ஊழியர்கள் தீயை அணைப்பதற்குள், மருந்து கழிவுகள் முழுவதும் தீ பரவி, வெடி சத்தங்களுடன் கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்போரூர், மாமல்லபுரம் பகுதிகளில் இருந்து வாகனங்களுடன் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.

அவர்கள் சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் போராடி, நள்ளிரவு ஒரு மணியளவில் தீயை முற்றிலும் அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக, தொழிற்சாலையில் பணியில் இருந்த ஊழியர்கள் மற்றும் காவலர்களுக்கு எவ்வித தீக்காயமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை. எனினும், சித்த மருந்து மூலப்பொருட்கள் மற்றும் அவற்றின் கழிவுகள் என சுமார் ₹2 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானதாக போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இவ்விபத்து குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டாம்ப்கால் மருந்து நிறுவனத்தில் மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

The post திருப்போரூர் அருகே டாம்ப்கால் மருந்து நிறுவனத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article