
திருப்பூர்,
திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கி இருக்கும் வெளிநாட்டை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் திருப்பூரில் தங்கி இருக்கிறார்களா? என போலீசார் ரோந்து சுற்றி கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் வடக்கு போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனா். அப்போது கருமாரம்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
இதைத்தொடர்ந்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் வங்கதேசம் பர்கனாஸ் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ஹீசைன்(வயது 45), இப்ராகிம்(33) என்பதும் தெரியவந்தது. இவர்கள் திருப்பூரில் கடந்த 9 வருடங்களாக தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், அவர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.