
புதுக்கோட்டை,
புதுக்கோட்டையில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
`ஓரணியில் தமிழ்நாடு' என்ற பரப்புரையை தி.மு.க. சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இது தி.மு.க.வுக்காக அல்ல. தமிழகத்திற்கான ஒரு பரப்புரை, தமிழ்நாட்டிற்கான ஒரு முழக்கம்.
ஜெயலலிதாவை போல, எங்களுக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் தெரியவில்லை என்று நாங்கள் எந்த காலத்திலும் கூறவில்லை. எதிரிகள் இருக்கிறார்கள், ஆனால் அந்த எதிரிகளுக்கு தைரியம் கிடையாது. அந்த எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றல் எங்களுக்கு இருக்கிறது. இந்த பரப்புரையில் அவர்களையும் சந்தித்து தமிழகத்தின் நிலை, கீழடி ஆராய்ச்சி விவகாரத்தையும் எடுத்துரைக்க உள்ளோம். அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., தே.மு.தி.க. என அனைத்து கட்சியினரையும் சந்திப்போம்.
அ.தி.மு.க. ஆட்சியில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் தந்தை, மகன் இறந்த சம்பவத்திற்கும், திருப்புவனம் காவலாளி மரணத்திற்கும் வேறுபாடு இருக்கிறது. திருப்புவனம் காவலாளி மரணத்தில் தவறு செய்தவர்கள் காவல்துறையினராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவாா்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் சம்பவத்தில் தந்தை, மகனை அடித்தே கொலை செய்தனர். அது வேறு, இது வேறு விவகாரம். இரண்டையும் ஒப்பிட முடியாது.
சாத்தான்குளம் சம்பவம் என்றும் மறக்க முடியாத, மாற்ற முடியாத ஒன்று. திருப்புவனம் சம்பவம் என்பது தற்செயலாக நிகழ்ந்திருக்கிறது. இது துரதிர்ஷ்டவசமான ஒன்று. அதற்கு அடிப்படை காரணங்களை கண்டுபிடித்து வருகிறோம். காவல்துறை எந்த அளவுக்கு பொறுப்பு என்பது விசாரணையில் தெரியவரும்.
குற்றவாளிகளை, குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க மாட்டோம். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் யாராக இருந்தாலும் நாங்கள் விட்டு விடுவதில்லை. எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் இந்த அரசுக்கு கிடையாது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் 5 மாதத்திலேயே தண்டனை வாங்கி கொடுத்தோம். அதுபோல இந்த சம்பவத்திலும் தண்டனை வாங்கி கொடுத்து நீதிமன்றத்தில் இந்த அரசு சிறந்த அரசு என்ற பாராட்டை பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.