
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). காரில் இருந்த நகைகள் மாயமான புகார் தொடர்பாக அவரை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்றபோது, தனிப்படை போலீசார் தாக்கியதில் கடந்த 29-ந்தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, இதில் தொடர்புடையதாக கூறப்படும் தனிப்படை போலீஸ்காரர்களான பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், இளைஞர் அஜித்குமாரை போலீசார் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மடப்புரம் கோவிலின் அருகே உள்ள கோ சாலை உள்ள இடத்தில், தனிப்படை போலீசார் அஜித்குமாரை விசாரணைக்காக அழைத்து சென்று அவரை ஒரு கம்பியில் கட்டி வைத்து பிளாஸ்டிக் மற்றும் இரும்பு குழாய்களால் சரமாரியாக தாக்கினர். அஜித்குமாரை தாக்கும் போலீசார் எந்தவித காவல் சீருடையும் அணியாமல் சாதாரண உடையில் அவரை சரமாரியாக தாக்குகின்றனர். அதுமட்டுமின்றி செருப்புடன் அஜித்குமாரை கடுமையாக உதைத்துள்ளனர். இந்த காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
போலீசாரால் காவலாளி அஜித்குமார் தாக்கப்பட்டதை வீடியோ எடுத்திருந்த சக்தீஸ்வரன் நேற்று முன்தினம் மதுரை ஐகோர்ட்டில் ஆஜராகி வீடியோவை ஆதாரமாக பதிவு செய்தார். அவரிடம் நீதிபதிகள், வீடியோவை எங்கிருந்து எடுத்தீர்கள்? எவ்வளவு நேரம் எடுத்தீர்கள்? என்ன நடந்தது? யார் அங்கு இருந்தார்கள்? என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், கோவில் பின்புறம் உள்ள கழிவறையில் இருந்து வீடியோ எடுத்தேன், சிறிது நேரம் தான் எடுத்தேன். என்னை போலீசார் கண் டுபிடித்து விடுவார்களோ? என்ற பயத்துடனேயே வீடியோ எடுத்தேன் என்றார்.
இந்த நிலையில், திருப்புவனம் இளைஞர் மரணம் வழக்கில் முக்கிய சாட்சியாக இருக்கும் சக்தீஸ்வரன் பாதுகாப்பு கோரி தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ரவுடிகளுடன் தொடர்பிலுள்ள காவலர்கள், ஏற்கனவே தன்னை மிரட்டினர். வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள காவலர் ராஜா கடந்த 28-ம் தேதியே தன்னை மிரட்டினார். தனக்கும், தன்னை சார்ந்தோரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அதில் கோரிக்கை வைத்துள்ளார்.