திருப்பரங்குன்றம் மலை விவகார வழக்குகள் மே 15க்குள் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

4 hours ago 1

மதுரை: திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பான வழக்குகளில், எழுத்துப்பூர்வ அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரையைச் சேர்ந்த பலர் ஐகோர்ட் மதுரை கிளையில் தனித்தனியே தாக்கல் செய்த மனு: திருப்பரங்குன்றம் கோயில் பாண்டிய மன்னன் காலத்தில் கட்டப்பட்டது. கோயிலின் தென்பகுதியில் உமையாண்டார் குகை கோயிலும், 11 தீர்த்தக் குளங்களும் அமைந்துள்ளன. இந்தகோயிலில் எவ்விதமான உயிர் பலியிடுதலும் செய்தல் கூடாது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் பாதுஷா தர்ஹா அமைந்துள்ளது. கடந்த ஜனவரியில் தர்ஹா சார்பில் ஆடு, கோழிகளை பலியிட்டு, சமபந்தி உணவு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இது பக்தர்களின் மனதை புண்படுத்தும்விதமாக அமைந்தது. திருப்பரங்குன்றம் மலையில் உயிரினங்களை பலியிடுவதற்கும், சமைத்து பரிமாறுவதற்கும் தடை விதித்து உத்தரவிட வேண்டும். மேலும் திருப்பரங்குன்றம் மலை, சிக்கந்தர் மலை என குறிப்பிடப்பட்டிருந்ததும் வருத்தமளித்தது.

எனவே, சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என ஒரு தரப்பினரும், திருப்பரங்குன்றம் மலையை ஒன்றிய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்று ஒரு தரப்பினரும், சிக்கந்தர் மலையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்றும், சிக்கந்தர் பாதுஷா தர்ஹாவை புதுப்பிக்கும் பணிக்கு காவல்துறை தொந்தரவு செய்யக்கூடாது. அங்கு வழிபாடு செய்ய செல்லும் இஸ்லாமியர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்று ஒரு தரப்பினரும் கூறியிருந்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், இந்த மனுக்களின் மீது மதநல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், அனைத்து தரப்பினரும் எழுத்துப்பூர்வமான அறிக்கையை மே 15க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

The post திருப்பரங்குன்றம் மலை விவகார வழக்குகள் மே 15க்குள் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article