மதுரை,
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஒரு தூண் உள்ளது. இந்த தூணில் தான் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்து முன்னணி உள்பட இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர். இதையடுத்து மலையில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் கார்த்திகை மகா தீபத்தை கோவில் நிர்வாகம் ஏற்று வருகிறது.
இந்த நிலையில் கார்த்திகை மாத பிறப்பான கடந்த 16-ந்தேதி அன்று மலை உச்சியில் உள்ள தூணில் யாரோ சிலர் அத்துமீறி தீபத்தை ஏற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கோவில் நிர்வாகம் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்தது. இது தொடர்பாக இந்து முன்னணியை சேர்ந்த சண்முகவேல், அரசுபாண்டி, , பிரசாந்த், சூர்யா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர் மேலும் செல்வகுமார், சரவணன் ஆகிய 2 பேரை தேடிவருகின்றனர்.
இதற்கிடையில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை கமிஷனர் சூரியநாராயணன் உத்தரவின்பேரில் மலை உச்சியில் உள்ள தூணை சுற்றி மூங்கில்களால் பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணியில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.மதுரை மாநகர் போலீஸ் உதவி கமிஷனர் குருசாமி உத்தரவின்பேரில் 16 பேர் கொண்ட ஆயுத படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மலையில் 24 மணி நேரமும் தூப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையில் காசிவிசுவநாதர் கோவிலுக்கு சென்று வரக்கூடிய இருபுறமும் மலை படிக்கட்டு பாதையில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரும் நடமாட்டம் உள்ளதா? என்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.