*மருந்து, மாத்திரைகள் பறிமுதல்
திருப்பத்தூர் : திருப்பத்தூர் அடுத்த ஜம்மனபுதூர் கிராமத்தில் தனிநபருக்கு சொந்தமான வெல்லம் குடோனில் அங்கநாதவலசை பகுதியை சேர்ந்த வேலு என்பவர் 10ம் வகுப்பு வரை படித்து விட்டு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வருவதாக மருத்துவ மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் ஞானமீனாட்சிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் உத்தரவின் பேரில் நேற்று தலைமை மருத்துவர் சிவக்குமார் தலைமையில், மருந்தாளுநர்கள் குரு ராகவேந்திரர் மற்றும் கார்த்திக் ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதில், வேலு போலி மருத்துவர் என்பது உறுதியானது.
தொடர்ந்து அதிகாரிகள் வெல்லம் குடோனில் கிளினிக் வைத்து போலி மருத்துவம் பார்த்து வந்த வேலுவை பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் அதற்குள் தப்பியோடி தலைமறைவானார். இதனையடுத்து கிளினிக்கை அதிகாரிகள் பூட்டு ‘சீல்’ வைத்தனர்.
மேலும், அவர் பயன்படுத்தி வந்த சுமார் ₹5ஆயிரம் மதிப்பிலான மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தலைமை மருத்துவர் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் கிராமிய போலீசார் தப்பி ஓடிய போலி மருத்துவர் வேலுவை வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.
The post திருப்பத்தூர் அருகே வெல்லம் குடோனில் கிளினிக் நடத்திய போலி மருத்துவர் தப்பி ஓட்டம் appeared first on Dinakaran.