டெல்லி மேலிட கவனத்தை ஈர்க்க போடும் செருப்பு, சாட்டையடி ஆட்டமெல்லாம் எடுபடாது என்கிறார்: wiki யானந்தா

14 hours ago 1

‘‘டெல்டா மாவட்டத்தில் 2025 புதுவருடத்தில் முக்கிய முடிவு எடுக்க தேனிக்காரர் ஆதரவாளர்கள் முடிவாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியம், மனுநீதி சோழன், கடலோரம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்த தேனிக்காரர் அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகள், தேனிக்காரருடன் இருந்தால் அரசியல் வாழ்க்கை இனி எப்படி இருக்கும் என தெரிய வில்லை என அவர்களுக்குள் அவ்வப்போது பேசிக்கிறாங்களாம்… தேனிக்காரையும் நேரிடையாக சந்தித்தும் நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர். ஆனால், வழக்கம் போல் வரும் ஆண்டு நமக்கான ஆண்டு இருக்கும் எனக்கூறி நிர்வாகிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். ஒவ்வொரு வருடமும் இப்படி தான் நிர்வாகிகளை தேனிக்காரர் சமாதானம் படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளாராம்…
2025ம் வருடம் தேனிக்காரருக்கு அவர் எதிர்பார்த்தப்படி நடக்கா விட்டால், 2025 புதுவருடத்தில் முக்கிய முடிவு எடுக்க உள்ளனர். அதில் தேனிக்காரரிடமிருந்து விலகி மாற்று கட்சிக்கு செல்ல இதற்கான வேலைகளையும் திரைமறைவில் கச்சிதமாக முடித்து விட்டார்களாம்… இந்த விஷயமும் தேனிக்காரர் கவனத்தக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 2025 புதுவருடத்தில் தேனிக்காரர் அணியில் மாற்றம் ஏற்படுமா? அல்லது தேனிக்காரரின் நம்பிக்கை பலிக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என சீனியர் நிர்வாகிகளுக்குள் பரவலாக பேசிக்கிறாங்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வசூல் வேட்டையில் கல்லா கட்டுறாராமே ஸ்டார் காக்கி..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் மாவட்டத்துல, நார்த் ஜோன் உயர் அதிகாரியின் டீம்ல 5 பேர் இருக்காங்களாம். இதுல பெயர்ல விக்கு வெச்சிருக்குற 2 ஸ்டார் காக்கி ஒருத்தரும் இருக்காராம். 5 பேர் டீம்ல இவரு ரொம்ப நல்லாவே கல்லா கட்ட ஆரம்பிச்சுட்டாராம். வெயிலூர் மாவட்டத்துல மணல் கடத்தல், காட்டன் நடத்துறவங்களோட பட்டியலை சேகரிச்சாராம். சேகரிச்ச நம்பர்கள்ல, வாட்ஸ் அப் காலில் தனித்தனியாக பேசியிருக்காரு. தப்பு நடக்கக்கூடாதுன்னு பேசுவாருன்னு பார்த்தா, நார்த் ஜோன் டீம் பெயரைச் சொல்லி, வசூல் வேட்டையில இறங்கிட்டாராம். அதேபோல, மாவட்டத்துல டாஸ்மாக் சரக்ைக பிளாக்ல சேல்ஸ் செய்றவங்களை பார்த்து எல்லாம் நான் தான் எனக்கும் ஒரு ஷேர் தரணும். இல்லன்னா, ரெய்டு வந்துடுவாங்கணு மிரட்டி வசூல் வேட்டை நடத்துறாராம். மார்கழி பனியில இந்த மேட்டர் தான் வெயிலூர் மாவட்டத்துல ஹாட்டா போய்கிட்டிருக்குது..’’ என்றார் விக்கியானந்தா.
“குட்டி பிரான்சில் நடக்கிற ரகசிய காய் நகர்த்தல் என்னவாம்” என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘குட்டி பிரான்சு நகரான புதுச்சேரியில் ஒன்றியத்தை ஆளும் கட்சியின் மாநில தலைமையை மாற்ற திரைமறைவு வேலைகள் நடந்ததாம். எங்கு போனாலும் பாச்சா பலிக்காததால் ஏமாற்றமடைந்த அதிருப்தி தரப்பானது, நாடாளுமன்ற தேர்தலில் உள்ளடி வேலைகளை பார்த்ததால் தோல்வியின் வாக்கு வங்கி வித்தியாசம் எகிறியதாக கூறப்பட்டதாம். அதன்பிறகு அமைச்சரவையில் இடம்பெற்ற செல்வாக்குமிக்கவர் தலைமைக்கு நியமிக்கப்படலாம் என அரசல் புரசலாக கட்சிக்குள் புகைச்சல் எழுந்த நிலையில் மேலிடம் நேரடியாக நோட்டம் விட்டதால் கப்சிப் ஆகினர். தற்போது கடைசி முயற்சியா கை கட்சிக்கு போட்டியாக அவரது சமூகத்தைச் சேர்ந்த மாஜி எம்பியான கிருஷ்ணர் பெயர் கொண்ட ஒருவரை தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலைகளை ஒன்றிய ஆளும் தரப்பு தீவிரமாக்கி இருக்கிறதாம். தலைவர் பதவிக்கு மட்டுமின்றி வரவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் வாக்குகளை சிதறடித்து சரியான போட்டியை ஏற்படுத்தும் நோக்கில் இந்த காய்நகர்த்தல் ரகசியமாக நடப்பதாக பரவலாக நிர்வாகிகளிடத்தில் பேசப்படுகிறதாம் என்றார் விக்கியானந்தா’’
‘‘மாஜி போலீஸ்காரரை எல்லாரும் ஏகத்துக்கு கலாய்க்கிறாங்களாமே..’’ என கேட்டு சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘மலராத கட்சியின் மாஜி போலீஸ்காரரு பெரும் நாடகத்தை அரங்கேற்றம் செஞ்ச விவகாரத்தை பார்த்து நாடே சிரிக்குதுன்னு தாமரை கட்சிக்காரங்களே சொல்றாங்க. இவர் வானத்தை வில்லாக வளைப்பேன்னு சொன்னதை நம்பி ஏமாந்துபோன டெல்லி மேலிடம் அவரை தூக்கியே ஆகணும் என்ற முடிவில் இருந்திருக்காங்க.. அந்நேரத்தில் லண்டனுக்கு அரசியல் படிக்க போறேன்னு சொல்லி தப்பிட்டாராம். திரும்பி வந்தாலும் மேலிடம் அவரை கண்டுகிடலையாம். அதே நேரத்தில் இலைக்கட்சி தலைவர் தினமும் ஒரு அறிக்கை கொடுத்துக்கிட்டே இருந்தாராம். அவரை பின்னுக்கு தள்ளி, எப்படியாவது ஏதோ ஒன்றைச்சொல்லி பரபரப்பாவதோடு டெல்லி மேலிடத்தின் கவனத்தை தன்பக்கம் திருப்பணும் என்று திட்டமிட்டுக்கிட்டு இருந்திருக்காரு. இதற்காக போட்ட திட்டம்தான் காலில் செருப்பு போடமாட்டேன், 48 நாள் நோன்பு இருப்பேன், சாட்டையால் தனக்குத்தானே அடிப்பேன்னு சொன்னது எல்லாமுமாம். அதன்படியே நூலால் தயாரிக்கப்பட்ட சாட்டையை வாங்கி தன்னை அடித்துக்கொண்டாராம்.. அப்போது அங்கிருந்த கட்சிக்காரங்க நமட்டு சிரிப்பு சிரிச்சிருக்காங்க. ஆனால் இதனால் எல்லாம் டெல்லி மேலிடத்தின் கருணை பார்வை விழுந்து விடாது. அதுக்கு தேவை ரிசல்ட் தான். டெபாசிட் காலியாகிற நிலையில் கட்சியை வைத்துக்கொண்டு இப்படியா செய்வது என தாமரை நிர்வாகியே அலுத்துக்கொண்டார்களாம்.
இதில் இன்னொரு விஷயமும் இருக்கு.. இப்படித்தான் இலைக்கட்சி தலைவர் ஊரிலும் சைக்கிள் கட்சியை சேர்ந்த ஒருவர் 28 வருடங்களுக்கு முன்பு ஒரு சபதம் எடுத்தாராம். மூப்பனார் ஆட்சிக்கு வரும்வரை செருப்பை அணியமாட்டேன்னு சொல்லியிருக்காரு.. செல்வச்செழிப்போடு இருக்கும் அந்த சைக்கிள் கட்சி நிர்வாகி இன்னும் செருப்பு அணியாமல் இருக்காராம்.. இந்த சமாச்சாரத்தை மாஜி போலீஸ்காரருக்கு சொல்லிக்கொடுத்ததே நீ தானான்னு அந்த சைக்கிள் கட்சிக்காரரை அவரது நண்பர்கள் கலாய்ப்பதோடு மட்டுமல்லாமல் உன் நிலைதான் மாஜி போலீஸ்காரருக்கும் ஏற்படுமுன்னு சொல்லி வாய்விட்டு சிரிக்கிறாங்களாம்….’’ என்றார் விக்கியானந்தா.

The post டெல்லி மேலிட கவனத்தை ஈர்க்க போடும் செருப்பு, சாட்டையடி ஆட்டமெல்லாம் எடுபடாது என்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article