திருப்பதி பிரம்மோற்சவ விழா: பட்டு வஸ்திரங்களை சமர்பித்தார் சந்திரபாபு நாயுடு

3 months ago 22

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி நேற்று இரவு ஆந்திர மாநில அரசு சார்பில் பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு 2 நாள் பயணமாக நேற்று திருப்பதிக்கு வந்தார்.

விமானத்தில் வந்த அவர் நேற்று மாலை 4.45 மணியளவில் ரேணிகுண்டாவை அடைந்தார். அங்கு, திருப்பதி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ்வர், போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு, எம்.எல்.ஏ. ஆரணி. சீனிவாசுலு உள்பட பலர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர். அதைத்தொடர்ந்து சந்திரபாபுநாயுடு காரில் புறப்பட்டு மாலை 5.30 மணியளவில் திருமலையை அடைந்தார். திருமலையை அடைந்த சந்திரபாபுநாயுடுவை திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோர் வரவேற்றனர்.

இதையடுத்து சந்திரபாபுநாயுடு பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்தவாறு மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்று கோவிலுக்குள் நுழைந்தார். அப்போது அவர், மூலவர் ஏழுமலையானிடம் பட்டு வஸ்திரங்களை சமர்ப்பணம் செய்தார். அதன்பிறகு தங்கக்கொடிமரத்துக்கு மாலை அணிவித்து, சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகுல மண்டபத்தில் வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர். லட்டு, தீர்த்த பிரசாதம் வழங்கினர். நிகழ்ச்சியில் சந்திரபாபுநாயுடுவின் மனைவி புவனேஸ்வரி பங்கேற்றார்.

Read Entire Article