
பழனி,
ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன்கல்யாண், தமிழகத்தில் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக அறுபடை வீடுகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். அதன்படி சுவாமிமலை, திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த அவர் நேற்று பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்தார். இதற்காக மதுரையில் இருந்து தனது மகன் அகிராநந்தனுடன் காரில் பழனி வந்தார்.
பழனி அடிவாரம் வந்த பின்பு, ரோப்கார் வழியாக மலைக்கோவில் சென்றார். அங்கு உச்சிக்கால பூஜையில் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசித்தார். தொடர்ந்து போகர்சன்னதியில் வழிபட்டார். பின்பு மீண்டும் ரோப்கார் வழியாக அடிவாரம் வந்தார். இதையடுத்து தனியார் தங்கும்விடுதியில் மதியஉணவு சாப்பிட்டு விட்டு காரில் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- நான் எந்த கோவிலுக்கு போனாலும் மக்கள் நலமுடன் இருக்க வேண்டுவேன். அதன்படி தேசத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் நல்லது நடக்க பழனி முருகனை வேண்டினேன். திருப்பதி-பழனி இடையே நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் தொடங்க ஆந்திர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் திருப்பதியில் இருந்து முக்கிய ஆன்மிக தலங்களுக்கு ரெயில் சேவை தொடங்க முடிவு செய்துள்ளோம். எனவே பழனி-திருப்பதி இடையே ரெயில் இயக்கவும் மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து, திருப்பதி லட்டு விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், திருப்பதி கோவில் லட்டு தயாரிப்பில் தவறு இருப்பதாக கடந்த 2 ½ ஆண்டுகளுக்கு முன்பே நான் சொன்னேன். கடவுள் விஷயத்தில் யாரும் இதுபோன்று பண்ணக் கூடாது என்றார். தொடர்ந்து வக்பு வாரிய சட்ட திருத்தம், பொதுசிவில் சட்டம் தொடர்பான கேள்விக்கு இது ஆன்மிக பயணம், அரசியல் வேண்டாம் என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.