திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவராக பி.ஆர். நாயுடு பதவியேற்பு

6 days ago 3

திருமலை,

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கான அறங்காவலர் குழு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு, சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், முழுமையாக கலைக்கப்பட்டது.

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்-மந்திரியாக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற நிலையில் புதிய அறங்காவலர் குழு அமைப்பதில் காலதாமதம் ஆனது. இதனையடுத்து திருப்பதி தேவஸ்தானத்துக்கான அறங்காவலர் குழு கடந்த 30ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் குழு தலைவராக தொல்லினேனி ராஜகோபால் நாயுடு (பி.ஆர்.நாயுடு) நியமிக்கப்பட்டார். உறுப்பினர்களாக எம்எல்ஏக்கள் ஜோதுலா நேரு, பிரசாந்திரெட்டி, எம்.எஸ்.ராஜூ, பனபாக லட்சுமி (முன்னாள் மத்திய மந்திரி), உள்பட 24 பேர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 54 ஆவது அறங்காவலர் குழு தலைவராக பி. ஆர். நாயுடு இன்று காலை பதவியேற்றுக்கொண்டார். இன்று காலை ஏழுமலையான் கோவிலில் பிஆர் நாயுடு பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 17 உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்பு நிகழ்ச்சிக்காக ஏழுமலையான் கோவிலுக்கு வந்த பி.ஆர் நாயுடுவை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். ஏழுமலையானை வழிபட்ட பின் அவர் தன்னுடைய பதவியை ஏற்றுக் கொண்டார். இன்று மாலையில், அன்னமய்யா ப கட்டிடத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட அறங்காவலர்குழு செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அறங்காவலர் குழுவில் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த ராம் மூர்த்தி, குஜராத்தைச் சேர்ந்த ஆதித் தேசாய் (எம்சிஐ முன்னாள் தலைவர் கேதன் தேசாய் மகன்), மராட்டியத்தின் பொருளாதார நிபுணர் சவுரப் போரா, மத்திய மந்திரி அமித்ஷாவின் நெருங்கிய நண்பரான கிருஷ்ணமூர்த்தி வைத்தியநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

Read Entire Article