திருப்பதி தேவஸ்தானத்தின் சேவைகள் பற்றி கருத்துகளை தெரிவிக்க 'கியூஆர் கோடு' அறிமுகம்

3 days ago 5

திருமலை,

திருப்பதி தேவஸ்தானத்தின் சேவைகள் பற்றி பக்தர்கள் கருத்துகளை ெதரிவிக்க 'கியூஆர் கோடு' உருவாக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

இதுகுறித்து திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்குச் சிறந்த சேவைகளை வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தச் சேவைகள் குறித்து பக்தர்கள் ஏதேனும் கருத்துகளை தெரிவிக்க தேவஸ்தானம் கியூஆர் கோட்டை அறிமுகம் செய்து, அதை ஸ்டிக்கராக உருவாக்கி திருமலை, திருப்பதியில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு ஏதேனும் குறைகள் தென்பட்டால் செல்போன் மூலமாக கியூஆர் கோட்டை ஸ்கேன் செய்து வாட்ஸ்-அப் மூலம் தங்களது கருத்துகளை எளிதாக தெரிவிக்கலாம். அதில் பக்தர்கள் தங்களின் பெயர், பகுதியை குறிப்பிட வேண்டும். அன்னப்பிரசாதம், தூய்மை, கல்யாண கட்டா, லட்டு பிரசாதம், லக்கேஜ், தரிசன அனுபவம், தரிசன வரிசை, அறைகள் போன்றவற்றில் உள்ள குறைகளை தெரிவிக்கலாம்.

பக்தர்கள் தங்களின் கருத்தை வெளிப்படுத்த உரை அல்லது வீடியோ வடிவத்தை தேர்வு செய்து அனுப்பலாம். அதில் தேவஸ்தான சேவைகள் தரமானது, சிறப்பானது, சராசரி, மேலும் மேம்பாடு தேவை அல்லது நன்றாக இல்லை, எனக் குறிப்பிடப்பட வேண்டும். பக்தர்கள் தங்கள் கருத்தை அதிகபட்சமாக 600 எழுத்துகளுக்குள் தட்டச்சு செய்யலாம் அல்லது வீடியோவாக பதிவேற்றம் செய்யலாம். கருத்தைச் சமர்ப்பித்த உடனேயே, "உங்கள் கருத்து வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டது, உங்கள் மதிப்புமிக்க கருத்துகளுக்கு நன்றி" என உறுதிப்படுத்தும் செய்தியைப் பெறுவீர்கள். திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகளை கருத்தில் கொண்டு சேவைகளின் தரத்தை மேம்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Read Entire Article