
திருப்பதி,
ஆந்திர மாநில துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் 2013ம் ஆண்டில் ரஷியாவைச் சேர்ந்த நடிகை அன்னா லெஜினோவாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். மகன் மார்க் ஷங்கர் (7) சிங்கப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் கோடை விடுமுறை பயிற்சி வகுப்புக்காக சென்றிருந்தார்.
கடந்த 8 ம்தேதி பயிற்சி முகாம் நடந்த அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மார்க் சங்கருக்கு கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக அவன் உயிர் தப்பினான். அவன் அருகில் இருந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
15 மாணவ, மாணவிகள் காயமடைந்தனர். தீ விபத்தால் அறை முழுவதும் புகை மண்டலமானது. அதை மார்க் சங்கர் சுவாசித்ததால் நுரையீரலிலும் பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சிங்கப்பூரிலுள்ள மருத்துவமனையில் மார்க் சங்கர் அட்மிட் செய்யப்பட்டான். தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளான்.
இந்நிலையில் அவன் உடல்நலன் தேறினால் முடிகாணிக்கை செலுத்துவதாக அண்ணா லெஜினோவா முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்று முடி காணிக்கை செலுத்தினார். இதற்காக நேற்று திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு அவர் வந்தார்.
அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். அவர் கிறிஸ்தவர் என்பதால் அதற்கான விசேஷ படிவத்தில் கையெழுத்து பெற்றனர். பின்னர் அன்னா லெஜினோவா, கோவிலில் தலைமுடி காணிக்கை செலுத்தினார். விருந்தினர் மாளிகையில் ஓய்வு எடுத்த அவர், இன்று (திங்கட்கிழமை) வி.ஐ.பி. தரிசனத்தின்போது திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.