திருப்பதி,
ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. உலக புகழ்பெற்ற இந்தக் கோவிலுக்கு தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். ஏழுமலையான் கோவில் நிர்வாகத்தை திருப்பதி தேவஸ்தானம் அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.
ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டனர். புதிதாக நியமிக்கப்பட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் , தலைவர் பி.ஆர் நாயுடு தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், திருப்பதி கோவிலில் பணியாற்றும் இந்து அல்லாத பிற மத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர் நாயுடு, திருப்பதி கோவிலில் பணியாற்றும் இந்துக்கள் அல்லாத பிற மத ஊழியர்களை மாற்ற முடிவு செய்து இருக்கிறோம். ஆந்திர அரசிடம் அவர்கள் ஒப்படைக்கப்படுவார்கள்" என்றார். 2018 ஆம் ஆண்டு வெளியான அறிக்கையின் படி, திருப்பதி கோவிலில் 44 பிற மத ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள்.