திருப்பதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும்: ஆந்திர அரசு அறிவிப்பு

10 hours ago 2

அமராவதி: திருப்பதியில் வைகுண்ட ஏகாதேசி தரிசனத்துக்காக டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. திருப்பதி மாவட்டத்துக்கு பொறுப்பானவரும், மாநில வருவாய்த் துறை அமைச்சருமான அநகனி சத்ய பிரசாத், சக அமைச்சர்களுடன், நெரிசல் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றுவரும் எஸ்விஐஎம்எஸ் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அவர் இந்த நிவாரண நிதி அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் உறவினர்களும், சிகிச்சை பெற்று வருபவர்களின் உறவினர்களும் ஆறுதல் கூற முடியாத அளவுக்கு மருத்துவமனை வளாகத்தில் கதறி அழுதபடி இருந்தனர்.

அமைச்சர்கள் குழுவினை அந்த உறவினர்கள் சுற்றி வளைத்தனர். மேலும், தங்களின் பயங்கரமான அனுபவங்களை அமைச்சர்களிடம் தெரிவித்தனர். இதனிடையே, இந்த கூட்ட நெரிசல் பிரச்சினை தொடர்பாக நாராயணவனம் தாசில்தார், திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி, பாரதிய நியாய சம்ஹிதா பிரிவு 194-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவின் திருப்பதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்காக பல்வேறு இடங்களில் 90 கவுண்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. டோக்கன் இன்று (ஜன.9) காலை 5 மணி முதல் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் புதன்கிழமை இரவு இலவச தரிசன டிக்கெட்டை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டிருந்தனர். அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அதிகம் இருந்தது. அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் விபரம்: நெரிசலில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள எஸ்விஐஎம்எஸ் பல்நோக்கு மருத்துவமனை மற்றும் எஸ்விஆர் ருயா அரசு பொது மருத்துவமனை வளாகங்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் யார் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன்படி, எஸ்.லாவண்யா (38), தாடிசெட்டிபலேம், விசாகபட்டினம் | மல்லிகா (50), ஆத்தூர், சேலம், தமிழ்நாடு | புத்தேடி நாயுடு பாபு (55), ஆய்வக உதவியாளர், நரசிபட்ணம் ரயில் நிலையம், கண்டிபள்ளி | சாந்தி (33), தினக்கூலி, விசாகப்பட்டினம். இவர்கள் முச்சுத் திணறல் காரணமாக இறந்ததாக எஸ்.வி.ஆர். ருயா மருத்துவமனையால் அறிவிக்கப்பட்டது. அதேபோல், ஜி. ரஜினி (47), மட்டிலப்பாலம், விசாகப்பட்டினம் மற்றும் வி.நிர்மலா (55), கேரளா ஆகியோர் எஸ்விஐஎம்எஸ் மருத்துவமனையில் உயிரிழந்தனர். காயம் காரணமாக சிகிச்சைக்காக 41 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில் 20 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர். 21 பேர் எலும்பு முறிவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்கள் அனைவரும் சிறப்பான சிகிச்சைக்காக ருயா மருத்துவமனையில் இருந்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் நடத்திவரும் எஸ்விஐஎம்எஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

The post திருப்பதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும்: ஆந்திர அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article