திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்: நாளை மறுதினம் விஸ்வக்சேனாதிபதி வீதி உலா

3 months ago 17

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 4ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. நாளை மறுதினம் விஸ்வக்சேனாதிபதி வீதி உலா நடக்கிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 4ம்தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு நாளை மறுதினம் அங்குரார்ப்பணம் எனப்படும் முளைப்பாரி நிகழ்ச்சி நடக்கிறது. முதல் நாளான 4ம் தேதி மாலை 3 மணியளவில் கருட உருவம் பொறித்த பிரம்மோற்சவ கொடியை விஸ்வக்சேனாதிபதி, சக்கரத்தாழ்வார், தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி ஆகியோர் யானைகள் அணிவகுப்புடன் வீதியுலா நடைபெறும். பின்னர் கோயில் தங்க கொடிமரத்தில் மாலை 5.45 மணி முதல் 6 மணிக்குள் மீன லக்னத்தில் வேதமந்திரங்கள் முழங்க பிரம்மோற்சவ கொடி ஏற்றப்படும். இரவு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை சமர்ப்பிக்க உள்ளார். தொடர்ந்து முதல் உற்சவமாக பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி நான்கு மாட வீதிகளில் பவனி நடைபெறும்.

முக்கிய விழாவாக 10ம் தேதி காலை சூரிய பிரபை வாகன உற்சவம், இரவு சந்திர பிரபை வாகன உற்சவத்திலும் ஏழுமலையான் பவனி நடைபெறும். 11ம் தேதி காலை மகா ரதம் எனப்படும் தேரோட்டம் நடக்கிறது. அன்றிரவு குதிரை வாகனத்தில் சுவாமி உற்சவம் நடைபெறும். 12ம் தேதி காலை புஷ்கரணியில் (குளம்) தீர்த்தவாரி நடைபெறும். அன்றைய தினம் கொடி இறக்குதல் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருமலை முழுவதும் வண்ண மின்விளக்குகளால் ஜொலிக்கிறது. மேலும் கோயில் முழுவதும் வெளிநாட்டு மலர்களால் அலங்காரம் செய்யும் பணி நடந்து வருகிறது. திருமலை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆழ்வார் திருமஞ்சனம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 12ம் தேதி நிறைவு பெறுகிறது.

இதையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் இன்று காலை நடந்தது. முன்னதாக சுவாமிக்கு நித்ய பூஜைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து மூலவரை பட்டு வஸ்திரத்தால் மூடப்பட்டது. பின்னர் பச்சை கற்பூரம், கிச்சலிக்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், திருச்சூரணம் உள்ளிட்ட பல்வேறு மூலிகை கலவையை கோயில் முழுவதும் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து கோயில் முழுவதும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. இதையொட்டி இன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை பக்தர்கள் தரிசிக்க அனுமதிக்கப்படவில்லை. காலை 11 மணிக்கு பிறகு ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்களும், அதன்தொடர்ச்சியாக இலவச தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களும் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து தரிசித்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் வைகுண்டம் கியூ காம்பளக்ஸ் முழுவதும் நிரம்பி டிபிசி வளாகம் வரை சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் காத்திருக்கின்றனர். நேற்று ஒரே நாளில் 66,986 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 26,163 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் செலுத்திய காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. அதில் ரூ.5.05 கோடி காணிக்கை கிடைத்தது.

 

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்: நாளை மறுதினம் விஸ்வக்சேனாதிபதி வீதி உலா appeared first on Dinakaran.

Read Entire Article