திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 நாட்கள் வசந்த உற்சவம்: நாளை தொடக்கம்

1 week ago 5

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் 3 நாட்கள் வசந்த உற்சவம் நாளை தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் பவுர்ணமி நாளில் முடிவடையும் வகையில், வசந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை முதல் 3 நாட்கள் வசந்த உற்சவம் நடக்கிறது. முதல் நாளான நாளை காலை 6.30 மணிக்கு, தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி நான்கு மாடவீதிகளில் பவனி நடைபெறும். பின்னர் வசந்தோத்சவ மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.
2ம் நாளான (11ம் தேதி) தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி காலை 8 மணி முதல் 10 மணி வரை தங்க ரதத்தில் திருமாட வீதிகளில் ஊர்வலமாக சென்று வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வார்.

கடைசி நாளான 12ம் தேதி, தேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி, சீதா, ராம, லட்சுமண, ஆஞ்சநேய சுவாமியின் உற்சவர்களும், ருக்மணி சமேத கிருஷ்ணர் ஊர்வலமாக வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளி அபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி ஒவ்வொரு நாளும் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் உள்ளிட்ட மூலிகை கலவை கொண்டு அபிஷேகம் செய்யப்படும். மலையப்ப சுவாமிக்கு வசந்த காலத்தில் நடைபெறும் இந்த உற்சவம் என்பதால் வசந்த உற்சவம் என்று அழைக்கப்படுகிறது.

வசந்த உற்சவத்தை முன்னிட்டு நாளை திருப்பாவாடை சேவை, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், மற்றும் 12ம்தேதி வரை சஹஸ்ர தீப அலங்கார சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ.3.93 கோடி காணிக்கை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது கோடை விடுமுறையொட்டி பக்தர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று 65,201 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 21,040 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.3.93 கோடி கிடைத்துள்ளது. இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் காத்திருப்பு அறையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து தரிசிக்கின்றனர். ரூ.300 தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 1 மணி நேரத்தில் தரிசித்தனர்.

 

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 நாட்கள் வசந்த உற்சவம்: நாளை தொடக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article