திருப்பதி ஏழுமலையானுக்கு சங்கு சக்கரம் கொடுத்த ராமானுஜர்

2 months ago 21

ஸ்ரீவைஷ்ணவ ஆச்சார்யர்களில் மிகவும் முக்கியமானவரான ராமானுஜர், திருப்பதியில் பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளார். குறிப்பாக, திருப்பதியை வைணவத் தலமாக நிலை நிறுத்தியவரே ராமானுஜர்தான்.

அவர் வாழ்ந்த காலத்தில் வேங்கடமலை மீது இருப்பது சைவ கோவிலா? வைணவ கோவிலா? கருவறையில் எழுந்தருளியிருப்பது சிவன் சிலையா? பெருமாள் சிலையா? என்ற சர்ச்சை ஏற்பட்டது. இரண்டு சமயத்தினரும் உரிமை கொண்டாடினர். அப்போது ராமானுஜர் ஏழுமலையானுக்குச் சங்கு, சக்கரம் சாத்தி, பெருமாள் என்று நிலை நாட்டினார்.

இதன் பின்னணியில் உள்ள புராண தகவல்:

திருமலை கோவில் கருவறையில் வீற்றிருப்பது நாராயணனின் அம்சமா, சிவனின் அம்சமா? என்ற சர்ச்சை எழுந்தபோது, இதுபற்றி முடிவு செய்யும் பொறுப்பை ராமானுஜரிடம் விட்டுவிடுகிறான் மன்னன். இதையடுத்து கோவிலில் உள்ள திருமேனி முன்பு இலை நிறைய சைவர்களின் அடையாளமான திருநீற்றை ராமானுஜர் வைக்கிறார். அதேபோல் நாராயண அம்சமான சங்கு சங்கரத்தையும் வைக்கிறார்.

பின்னர் சிலையின் முன்பு நின்று, "எம்பெருமானே, நீ நாராயண அம்சம் என்றால் சங்கு சக்கரத்தை உன் மேனியில் தரித்துக்கொள், சிவனின் அம்சம் என்றால் திருநீற்றை பூசிக்கொள்" என்று கூறி சன்னதியின் கதவை அடைத்துவிடுகிறார்.

இரவு முழுவதும் அனைவரும் காத்திருக்கின்றனர். மறுநாள் காலையில் திருப்பள்ளியெழுச்சி பாடி சன்னதி கதவு திறக்கப்படுகிறது. எம்பெருமான் தனது சிலைத்திருமேனியின் தோள்களில் சங்கு, சக்கரத்தை ஏந்திக்கொண்டு நின்றார். பக்தர்கள் மெய்சிலிர்த்து அந்த சிலைத் திருமேனி நாராயணனின் அம்சம் என்று ஒப்புக்கொண்டனர்.

இவ்வாறு திருப்பதி தலத்தை வைணவத் தலம் என்பதை உறுதிப்படுத்திய ராமானுஜர், கோவிலில் பல்வேறு திருப்பணிகளை செய்தார். ஸ்ரீரங்கம் கோவிலின் நடைமுறைகளை இங்கும் கொண்டு வந்தார். காட்டை திருத்தி, வீதி அமைத்து, பெருமாள் வீதிவலம் வரவும், விழாக்கள் நடத்தவும் ஏற்பாடு செய்தார். அதிலிருந்துதான் திருமலை நகரம் தோன்றியது. இன்றும் அங்கு 'ராமானுஜர் வீதி' இருக்கிறது. கோவில் நந்தவனம் அமைத்து அழகுபடுத்தினார். அது 'ராமானுஜர் நந்தவனம்' என்ற பெயரில் இன்றும் இருக்கிறது.

ஏழுமலையான் கோவிலுக்கு சிறப்பு சேர்த்த ராமானுஜருக்கு கோவிலில் தனி சந்நிதி உள்ளது. ராமானுஜர் பிறந்த திருவாதிரை நட்சத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் திருப்பதியில் விழா கொண்டாடுகிறார்கள். 

Read Entire Article