அன்னமாச்சாரியாரும் காலணியும்
ஆந்திரா மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள தாள்ளபாக்கம் என்ற ஊரில், 1408 – ஆம் ஆண்டு, மே மாதம், 9-ஆம் தேதி, சூரி – அக்கலாம்பா தம்பதி யருக்கு, மகனாகப் பிறந்தார், அன்னமாச்சாரியார். (தெலுங்கில் – அன்னமய்யா) ஆரம்ப காலகட்டத்தில் கடவுள், பக்தி என்பதில் அன்னமாச்சாரிக்கு விருப்பமில்லை. அன்னமாச்சாரியாருக்கு திருமணப் பருவம் வருகிறது. திம்மக்கா என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். இவர், “சுபத்ரா கல்யாணம்’’ என்னும் நூலை இயற்றியதன் காரணமாக, தெலுங்கு இலக்கியத்தின் முதல் பெண் புலவராக அறியப்படுகிறார். நாட்கள் செல்ல, அன்னமாச்சாரியார், இன்னொரு திருமணமும் செய்து கொள்கிறார். சில ஆண்டுகளுக்கு பின், வைணவத்தின் மிக பெரிய ஆச்சாரியரான ராமானுஜரின் கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, திருமலையானை அறிந்து கொண்டு, சுமார், 32,000க்கும் அதிகமான கீர்த்தனைகளை (பாட்டுகளை) வேங்கடவனின் மீது, கர்நாடக இசை முறையில்
இயற்றினார்.
இதில் இவர் இயற்றிய, “பிரம்மமொக்கடே’’ பாடல் தனிச் சிறப்பை பெற்றது. இவரது பெரும்பாலான பாடல்கள், செப்புத் தட்டுகளில் எழுதப்பட்டிருந்தது. அது தற்போதுள்ள திருமலை வெங்கடாஜலபதி கோயிலில் உள்ள உண்டியலுக்கு எதிரில், ஒரு சிறு அறை ஒன்றில் சுமார் மூன்று நூற்றாண்டுகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர், 1922-ஆம் ஆண்டில், கண்டுபிடிக்கப்பட்டன. இருந்தபோதிலும், அன்னமாச்சாரி யார் எழுதிய 32,000 பாடல்களில், வெறும் 12,000 பாடல்கள் மட்டுமே அந்த அறையில் இருந்து கண்டெடுக்கப்பட்டன. ஒரு முறை, மலையப்ப ஸ்வாமியை தரிசிக்க திருமலைக்கு நடைபயணம் மேற்கொள்கிறார், அன்னமாச்சாரியார். சக பக்தர்களோடு இணைந்து, அவர் எழுதிய பாடல்களை பாடிக் கொண்டு திருமலையை நோக்கி பயணித்தார்.
அப்போது நன்கு மழை பெய்து, திருமலை முழுவதும் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடத் தொடங்கியது. அந்த சமயத்தில், அன்னமாச்சாரியார் தன் கால்களை எடுத்து அடுத்த அடி எடுத்து வைக்கும்போது, கால்களை நகர்த்த முடியாமல் போய் கீழே விழுந்துவிடுகிறார். அவரால் எழுந்திருக்கவும் முடியவில்லை. “இது என்ன சோதனை? உன்னை நான் தரிசிக்க வரும்போது எனக்கு இப்படி ஒரு சோதனைகளை நீ தரலாமா?’’ என்று கண்ணீர் வடிக்கிறார். அடுத்த நொடி, “அன்னமாச்சாரி… கவலை வேண்டாம். நீ சிறு தவறு ஒன்றை செய்துவிட்டாய். உனது காலணிகளை அகற்றிவிட்டு, எனது திருமலையை பார் அப்போது உனக்கு புரியும்’’ என்று வேங்கடவனின் அசரீரி கேட்கிறது.
அதன்படி அன்னமாச்சாரி, தனது காலணிகளை அகற்றி, அருகில் ஓடிக் கொண்டிருக்கும் மழைநீரில் தூக்கி வீசி, திருமலையை பார்க்கிறார். அன்னமாச்சாரி கண்களுக்கு, திருமலை சாளக்கிராமமாக தெரிகிறது. ஏழு மலைகளும் ஜொலிக்கின்றன. “ஹா..ஹா.. தவறு செய்துவிட்டோம். என் மலையப்பன் வாசம் செய்யும் இந்த மலையானது, வெறும் மலை அல்ல. சாளக்கிராமத்தால் உருவான மலை. ஆகையால், நான் காலணிகளை அணிந்து சென்றிருக்க கூடாது. பெரிய தவறை செய்துவிட்டேன்.’’ என்று வருந்தினார், அன்னமாச்சாரியார். (சாளக்கிராமம் என்பது அது ஒரு வகையான கல்.
நேபாளில் கண்டகி என்னும் நதியில் உற்பத்தி ஆகின்றது. இந்த சாளக்கிராமக் கற்களில் கடவுளின் சாந்நித்தியம் (Power) நிறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.) அன்னமாச்சாரியாரின் வாழ்க்கை வரலாற்றைமை யமாகக் கொண்டு, “அன்னமய்யா’’ என்னும் தெலுங்குத் திரைப்படத்தை பிரபல இயக்குனர் கே. ராகவேந்திரராவ் இயக்கியிருந்தார். இந்த படத்தில், நாம் கூறிய காலணிக் காட்சிகளை மிக தத்ரூபமாக காட்சிப்படுத்தியிருப்பார்கள். இன்றும், திருமலையை காணும்போது செம்மண் நிறத்திலேயே காணப்படும். அந்த செம்மண் நிறத்தை நாம் சாளக்கிராமத்திலும் காணலாம்.
சாளக்கிராமம் கருமை நிறத்தில்தான் இருக்கும். அதனுள், செம்மண் நிறத்தை காண சில வழிமுறைகள் இருக்கின்றன. சாளக்கிராம பூஜைகள் முடிந்ததும், அதனை வஸ்திரத்தினால் (துணி) துடைத்து. அதனை கையில் எடுத்து, ஜோதியின் (வீட்டில் ஏற்றும் தீபம்) அருகில் வைத்தால், சாளக்கிராமதத்தினுள் செம்மண் நிறத்தில் காணப்படும். இதனை வைத்துக்கூட எந்த சாளக்கிராமக் கற்கள் ஒரிஜினல் – டூப்பிளிக்கேட் என்பதனை கண்டுபிடித்துவிடலாம்.ஆக, மலையப்பஸ்வாமி வாசம் செய்யும் திருமலை முழுவதும் சாளக்கிராம சாந்நித்தியம் நிறைந்தவை. நடைப்பயணம் மேற்கொள்ளும் போது நிச்சயம் பக்தர்கள் காலணிகளை அணியக்கூடாது. நடைப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப் பாடுகளுள், இது மிக முக்கியமானதாகும்.
லட்சுமி நரசிம்மர்
முக்கு பாவி மண்டபத்தை கடந்ததும், அழகிய தோற்றம் கொண்ட லட்சுமி நரசிம்மர் ஆலயம் இருக்கிறது. நரசிம்மரை தரிசித்ததும் மனதிற்கு அமைதியை கொடுத்தது. நரசிம்மரை குலதெய்வமாகக்கொண்டவர்கள், திருமலைக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யக் கூடாது என்ற எழுதப்படாத விதி ஒன்று உள்ளது. அந்த விதியினை இன்றும் நரசிம்ம பெருமாளை குலதெய்வமாகக் கொண்ட பலர் கடைப் பிடித்து வருகிறார்கள். இது வேதனையை தரக் கூடிய ஒன்று. இவை மாறவேண்டும். இந்த புராண கதையை படித்த பின்னராவது மாற்றம் நிகழும் என்று நம்புவோம்.
முன்னொரு காலத்தில், ஸ்ரீனிவாசனுக்கும் – பத்மாவதிக்கும் மிக பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்த திருமணத்தில், கலந்துகொள்ளாத தேவர்களே இல்லை. சிவபெருமான், பார்வதி தேவி, பிரம்மதேவர், சரஸ்வதி, நாரத மகரிஷி, விநாயகப் பெருமான், முருகப் பெருமான், சுகப்பிரம்ம ரிஷி, ஆஞ்சநேயர், கருடன், இந்த திருமணத்திற்கு கடன் வழங்கிய வராஹர் சுவாமி என அனைத்து தேவர்களும், ரிஷிகளும், முனிகளும், முக்கோடி தேவர்களும் ஏழுமலையானின் திருமணத்தில் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டனர்.திருமணம் நடைபெறும் இடத்தை எங்கு பார்த்தாலும், சுற்றியும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
வானத்தை நோக்கினால் வாணவேடிக்கை, தெருக்கள் முழுவதிலும் ரங்கோலிகள் வரையப்பட்டிருந்தன. ஒரு பக்கம் கோலாட்டம், மற்றொரு பக்கம் கும்மி, என அந்த இடமே விழாக்கோலம் பூண்டது. திருமணத்தை நடத்தி வைப்பதற்காக நான்கு ரிஷிகள் மந்திரங்கள் முழங்க, யாகத்தை வளர்த்தனர். திடீரென யாகம் நின்றது. அனைவரும் ரிஷிகளை நோக்கினர். “ஏன் யாகத்தை நிறுத்துனீர்கள்?’’ என்று பத்மாவதியின் தந்தை ஆகாஷ ராஜா வினவினார். இனி, ஸ்ரீனிவாசனின் குலதெய்வம் யார் என்பதனை தெரிந்தால்தான் மேலும் யாகத்தை தொடர்ந்து செய்துமுடித்து, திருமணம் நடைபெறும் சூழல்.
ரிஷிகள், நேராக ஸ்ரீனிவாசனை பார்த்து, “பிரபோ.. தங்களின் குலதெய்வம் யார்?’’ என்று ரிஷிகள் ஸ்ரீனிவாசனை பார்த்து கேட்டதும், அனைவரும் திகைத்தனர். அவ்விடமே அமைதியானது. சற்றும் யோசிக்காத நம் ஸ்ரீனிவாசன், “என் குலதெய்வம் நரசிம்ம பெருமாள்’’ என்று சொன்னாராம். ரிஷிகளுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. மீண்டும் யாகத்தை தொடங்கினர். யாகம் நல்லபடியாக பூர்த்தியாகி, ஸ்ரீனிவாசனுக்கும் – பத்மாவதிக்கும் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது. வெங்கடாஜலபதியும் – நரசிம்மரும் ரூபங்கள் வெவ்வேறாக இருந்தாலும் கடவுள் என்கின்ற ஸ்தானம் வரும் போது இருவருமே ஒருவர்தானே? அது எப்படி வெங்கடாஜலபதிக்கு நரசிம்மர் குலதெய்வமாக முடியும்? என்று இங்கே எல்லோருக்கும் ஒரு கேள்வி எழலாம்.
கேள்வியிலே பதிலும் இருக்கிறது பாருங்கள்! வெங்கடாஜலபதியும் – நரசிம்மரும் ரூபங்களில் வெவ்வேறானவர்கள் ஆனால் கடவுள் என்று வரும்போது இருவரும் ஒருவர்தானே? அப்படி ஒருவர் என்று ஆன பிறகு என் குலதெய்வம் நரசிம்மர், நான் வெங்கடாஜலபதியை திருமலைக்குச் சென்று வழிபட மாட்டேன் என்று கூறுவது சரியானதாகுமா? மேலும், ஸ்ரீனிவாசன், தன் குலதெய்வம் நரசிம்மர் என்று சொன்னதன் தாத்பரியத்தையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.இருவருமே பெருமாள்தான். ஆனாலும், பக்தனுடைய பக்திக்கு கட்டுப்பட்டு, அந்த பெருமாளும் என்னுடைய குலதெய்வம் என்று சொல்வது மாபெரும் கருணையாகும்.
ஒரே பெருமாள், பக்தனுக்காக, பக்தனின் பக்திக்காக தன்னை தாழ்த்திக்கொண்டு, பக்தனின் உபாசனை மூர்த்தியாக இருக்கக்கூடிய நரசிம்மரை நோக்கி அவரின் குலதெய்வம் என்று சொல்வது, பக்திக்கு கட்டுப்படுதல் தவிர வேறு என்ன இருக்க முடியும்! தானே பெரிய சத்ய வஸ்துவாக இருந்தாலும், அந்த சத்தியத்தை விளக்கும் போது, தன்னைவிட பெரியதாக விளக்கிக் காட்டும். இது பகவானின் ஒப்பிடமுடியாத உயர்ந்த குணங்களின் ஒன்று! இந்த நிகழ்வும், ஸ்ரீனிவாசனுக்கும் – பத்மாவதிக்கும் எப்படிபட்ட பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது என்பதனை, “ஸ்ரீனிவாச கல்யாணம்’’ என்னும் புராதன நூல் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த நூல், மிக அழகாக ஸ்ரீனிவாசனுக்கும் – பத்மாவதிக்கும் நிகழ்ந்த திருமணத்தை வர்ணிக்கிறது.
ஆக, நரசிம்மரை குலதெய்வமாகக் கொண்டவர்கள் திருமலைக்கு செல்லாமல் இருப்பது எத்தகைய தவறு என்பது புரிந்ததல்லவா! சிலர், திருமலையப்பனை குலதெய்வமாக கொண்டவர்களும், நரசிம்மரை தரிசிப்பதில்லை. அதுவும் தவறே! இதற்கு, இன்றும் ஒரு சான்று இருக்கிறது. திருமலையில், வெங்கடாஜலபதி சந்நதி அருகிலேயே, யோகநரசிம்மர் சந்நதி இருக்கிறது. வெங்கடாஜலபதியை சேவித்தவுடன், பிரதட்சணமாக வலம் வந்து, தங்க விமானத்தை தரிசித்த பின்னர், உண்டியலில் காணிக்கைகளை செலுத்த வேண்டும். அதன் பின்னர், வெளியே செல்லும் இடத்தில், யோக நரசிம்ம பெருமாள் இருக்கிறார். அவரைச் சேவித்துவிட்டு, கோயிலில் இருந்து வெளியே சென்றால் மட்டுமே, பூரணம் கிட்டும்.
திருமலையில் மட்டும் இல்லை, பல ஏழுமலையான் கோயில்களிலும் நரசிம்மரை பார்க்கமுடியும்.அதே போல், பல நரசிம்மர் கோயில்களிலும் தம்பதி சமேதராக வெங்கடாஜலபதி இருப்பார். குறிப்பாக, மிகவும் பழமைவாய்ந்த திருக்கோயில்களில் காணலாம். சென்னை – வேளச்சேரி தண்டீஸ்வரன் பகுதியில், பல்லவர்கள் கட்டிய “யோக நரசிம்மர்’’ கோயில் உள்ளது. இங்கு இருக்கும் கோபுரத்தில், வெங்கடாஜலபதியும் – பத்மாவதியும் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்கள். இனியும் தாமதிக்காமல், சற்றும் யோசிக்காமல் நரசிம்மரை குலதெய்வமாகக்கொண்டவர்கள், திருமலைக்கு பயணிக்கலாமே! அதுவும், நடைப் பாதை வழியாக! (பயணம் தொடரும்…)
ரா.ரெங்கராஜன்
The post திருப்பதி அலிபிரி முதல் திருமலை வரை- பகுதி 4 appeared first on Dinakaran.