திருநெல்வேலி அறிவியல் மையத்தில் இன்று முதல் 3 நாட்கள் 'எனது பழங்கால பொருட்கள் சேகரிப்பு' கண்காட்சி

1 month ago 6

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சர்வதேச அருங்காட்சியக தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 18-ம்தேதி கொண்டாடப்படுகிறது. சர்வதேச அருங்காட்சியக கவுன்சில் (International Council of Museums-ICOM) இந்த தினத்தை ஏற்பாடு செய்கிறது. இந்த நாளில் அருங்காட்சியகங்கள் மற்றும் அவற்றின் கலைப்பொருட்கள் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதற்காகவும், அருங்காட்சியகங்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கும் விதமாகவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் சர்வதேச அருங்காட்சியக தினம் 2025-ஐ (International Museum Day) கொண்டாடும் விதமாக இன்று முதல் 3 நாட்கள் (மே 16, 17, 18) 'எனது பழங்கால பொருட்கள் சேகரிப்பு' என்ற தலைப்பில் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா இன்று (வெள்ளிக்கிழமை 16.5.2024) மாலை 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது. இந்த கண்காட்சியினை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திறந்து வைக்க உள்ளார். மேலும் மதுரை தொல்லியல் துறை, தொல்லியல் அதிகாரி ஆசைத்தம்பி இந்நிகழ்வில் தலைமை தாங்க உள்ளார். இதில் நெல்லை நாணயங்கள் மற்றும் பழங்கால பொருட்கள் சேகரிப்போர் சங்கத்திலிருந்தும் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்தும் பழங்கால பொருட்களான நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், வீட்டு உபயோக பொருட்கள், புதை படிவங்கள், ரேடியோகள் என ஆயிரக்கணக்கான பொருட்கள் காட்சிப்படுத்த இருக்கின்றன.

சர்வதேச அருங்காட்சியக தினமான 18.5.2024 ஞாயிற்றுக்கிழமை, மாலை 4 மணிக்கு, 3 நாட்கள் கண்காட்சியின் நிறைவு விழா நடைபெற உள்ளது. இதில் மைசூர் மற்றும் போபாலில் உள்ள இயற்கை வரலாற்றுக்கான மண்டல அருங்காட்சியகங்களின் முன்னாள் இயக்குனரும், முனைவருமான சேதுராமலிங்கம் சிறப்பு விருந்தினராகவும், திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தின் அருங்காட்சியகத் துறை காப்பாளர் சிவகுமார் தலைமை தாங்கியும் 'எனது பழங்கால பொருட்கள் சேகரிப்பு' என்ற கண்காட்சியில் காட்சிப்படுத்துவோருக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்க உள்ளார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Read Entire Article