
காரைக்கால்,
புதுவை மாநிலம் காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள் பாலித்து வருகிறார். இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தர முடியாத பக்தர்கள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வெப்சைட்டில் சென்று, ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி தேவையான அர்ச்சனை, அபிஷேகங்களை செய்து பிரசாதங்களை பெற்று வந்தனர்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு கோவில் வெப்சைட் போலவே போலியான வெப்சைட் ஒன்று உருவானதையடுத்து, காரைக்கால் மாவட்ட கிரைம் போலீசார் கண்டுபிடித்து அதனை சரி செய்த நிலையில் மீண்டும் கோவில் பெயரில் போலியான வெப்சைட் உலா வருவதாக கூறப்படுகிறது. அதில் பக்தர்களை கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இந்த வெப்சைட்டில் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டவரும் ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், திருநள்ளாறு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், போலி இணையதளம் மூலம் பக்தர்களிடம் இருந்து அதிகப்படியான பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டதில் அர்ச்சகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, கோவில் அர்ச்சகர் வெங்கடேஸ்வரரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மோசடி புகாரில், பெங்களூருவை சேர்ந்த ஜனனி மற்றும் சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.