மதுரை: எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை மறுபரிசீலனை செய்யுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில், தொண்டர்கள் யாரும் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதை தடுக்கும் வகையில், சட்ட விதிகள் பொதுக்குழுவில் திருத்தப்பட்டது.
இதற்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்தபோது, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 20.4.2023ல் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு கட்டுப்பட்டது என்ற நிபந்தனையுடன், எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகாரம் செய்தது. மேலும், கட்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கும் அங்கீகாரம் அளித்தது. இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கட்சியின் எதிர்காலம் மற்றும் தொண்டர்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில், இந்த முடிவை மறு பரிசீலனை செய்யக் கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம்.
திருத்தப்பட்ட கட்சி விதிகளின்படி, பொதுச்செயலாளர் பதவிக்கு ஒருவர் போட்டியிட கட்சியில் 10 ஆண்டுகள் உறுப்பினராக வேண்டும். 5 வருடங்களுக்கு தலைமை கழகப் பதவி வகித்திருக்க வேண்டும். 10 மாவட்ட செயலாளர்கள் முன்மொழிய வேண்டும், 10 மாவட்ட செயலாளர்கள் வழிமொழிய வேண்டும் என்பது தொண்டர்களின் உரிமைக்கு எதிரானதாக உள்ளது. ஒரு அவதூறு வழக்கில் தனக்கு 70 வயது ஆகிவிட்டதாகவும், உடல்நல குறைபாடு காரணமாகவும் தன்னால் நேரில் நீதிமன்றத்தில் ஆஜராக இயலாது என எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு இருந்தார். வாக்காளர்களிடம் அதிமுக தனது ஆதரவை கணிசமாக இழந்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி மாற்றுக்கட்சிகளுக்கு செல்லும் நிலை உள்ளது. ஏற்கனவே, நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது. உடல்நலக்குறைவு காரணமாக அவர் தீவிர அரசியலில் இருந்து கூட ஓய்வு பெறலாம். அப்படி ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் புதிய பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கு, தற்போதைய விதிகளின்படி மற்றொரு தலைமையை தேர்வு செய்ய போர் எழும். கட்சியின் உறுப்பினர்களுக்கு தற்போது 2024ல் டிஜிட்டல் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்படுகிறது.
நான் மற்றும் 24 பேர் எங்களது உறுப்பினர் பதிவை புதுப்பித்தோம். ஆனால், எங்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கவில்லை. எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்ததால் எங்களுக்கு உறுப்பினர் அட்டை மறுக்கப்பட்டுள்ளது. உள்கட்சித் தேர்தல்களில் மோதலைத் தவிர்ப்பதற்காக மற்ற தலைவர்களின் ஆதரவாளர்களின் உறுப்பினர் விண்ணப்பங்களை மாவட்டச் செயலாளர்களும் பரிசீலிக்கவில்லை. அதிமுக தேர்தல் அரசியலில் மிக மோசமான நிலையடைந்து வருகிறது.
2019 மக்களவை தேர்தல் தோல்விக்குப் பிறகு, 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2021 மற்றும் 2022ல் உள்ளாட்சித் தேர்தல்களிலும், சமீபத்திய 2024 நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் கட்சி தோல்வியை சந்தித்து வருகிறது. மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் 2 கோடி உறுப்பினர்கள் கொண்ட கட்சி மொத்தம் 89 லட்சம் வாக்குகள் தான் பெற்றுள்ளது. இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கும் கட்சித் தள்ளப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட கட்சி விதிகள்படி 3 நபர்கள் தான் பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட முடியும். பொதுச்செயலாளரால் நியமனம் செய்யப்பட்ட 79 தலைமை கழகப் பதவி வகிப்பவர்களில், தமிழ்நாட்டில் உள்ள 75 மாவட்ட செயலாளர்கள் மட்டும் 3 நபர்களை, பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட பரிந்துரை செய்யலாம். பிற மாநிலங்களில் அதிமுகவுக்கு மாவட்ட செயலாளர்கள் பதவி கிடையாது.
ஒரிஜினல் விதிப்படி 5 வருடங்கள் உறுப்பினராக இருந்தாலே பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியும். உண்மையான உள்கட்சி ஜனநாயகத்தை காக்கவும், அழிவிலிருந்து அதிமுகவை காப்பாற்றவும், எடப்பாடியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமனம் செய்த முடிவை மறுபரிசீலனை செய்ய கோரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அளித்த மனுவை பரிசீலிக்குமாறு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர். இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் தொடர்பான மனுக்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
The post திருத்திய விதிகள் தொண்டர்களின் உரிமைக்கு எதிரானது எடப்பாடியை பொதுச்செயலாளராக அங்கீகரித்ததை எதிர்த்து வழக்கு: விரைவில் விசாரணைக்கு வருகிறது appeared first on Dinakaran.