திருத்தணியில் மகாத்மா காந்தி சிலை இடிப்பு: ஜி.கே.வாசன் கண்டனம்

3 hours ago 2

சென்னை,

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

திருவள்ளுர் மாவட்டம், திருத்தணி மா.பொ.சி சாலையில், மார்க்கெட் அருகில் அமைந்துள்ள தேசப் பிதா மகாத்மா காந்தியின் சிலையை திருத்தணி நகராட்சி எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இடித்ததை தமிழ் மாநில காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

திருத்தணி நகராட்சி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காந்தி சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்த முடிவெடுத்த போது, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கடந்த நவம்பர் மாதம் எதிர்ப்பு தெரிவித்து திருத்தணி நகராட்சியிலும், கோட்டாச்சியர் அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமலும் தமிழ் மாநில காங்கிரஸ் அளித்த கோரிக்கைக்கு பதில் அளிக்காமலும், இரவோடு இரவாக சிலையை இடித்துள்ளார்கள். ஐம்பது வருடத்திற்கு மேலாக அனைத்து அரசியல் கட்சியினராலும், மக்களாலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்ட மகாத்மாவின் சிலையை இடித்ததை திருத்தணி வாழ் மக்கள் எல்லோரையும் வேதனையும், கவலையும் அடைய செய்திருக்கிறது.

மகாத்மா காந்தியின் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும், அப்படி இல்லையேல் அருகில் உள்ள மார்க்கெட்டில் சிலையை தமிழக அரசே திறக்க வேண்டும் என்று திருத்தணி வாழ் மக்கள் சார்பிலும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பிலும் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article