திருத்தணியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்: அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு

2 hours ago 2

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், பிரசித்தி முருகன் தலம் அமைந்துள்ள திருத்தணியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுபப்டுத்தும் வகையில், அரக்கோணம் சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பணிமனை அருகில் சுமார் 4.60 ஏக்கர் பரப்பளவில், உள்கட்டமைப்பு மற்றும் வசதிகள் திட்டத்தின்கீழ் ரூ.12.74 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகளை கடந்த 2022ம் ஆண்டு அமைச்சர் கே.என்.நேரு துவக்கிவைத்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் துரிதகதியில் நடந்து, தற்போது 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே நிதி பற்றாக்குறையால், கடந்த 6 மாதங்களுக்கு முன் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, புதிய பேருந்து நிலையத்தின் உள்கட்டமைப்பு பணிகளுக்கு கூடுதலாக ரூ.2.93 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, தற்போது புதிய பேருந்து நிலைய நுழைவுவாயில் கோபுரம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், திருத்தணியில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நேற்று அமைச்சர் சா.மு.நாசர் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

பின்னர், புதிய பேருந்து நிலையத்தின் இறுதிக்கட்ட பணிகளை துரிதகதியில் முடித்து, விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று அமைச்சர் சா.மு.நாசர் உறுதியளித்தார். இந்த ஆய்வில் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர், திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி எம்.பூபதி, நகரமன்ற துணைத் தலைவர் ஆ.சாமிராஜ், நகர திமுக செயலாளர் வினோத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post திருத்தணியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள்: அமைச்சர் சா.மு.நாசர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article