திருத்தணி வட்டார கல்வி அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு

2 months ago 18

திருத்தணி: திருத்தணியில் வட்டார கல்வி அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் முறையாக வழங்கப்படுவது குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தார். திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் ரயில் நிலையம் அருகில் காந்தி ரோட்டில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வட்டார கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது‌.

இந்த அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அலுவலகத்தில் பதிவேடுகளை ஆய்வு செய்த அமைச்சர் மாணவர்களுக்கு வழங்கப்படும் பருவ பாட புத்தகங்கள், சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் உரிய நேரத்தில் வழங்கப்படுவது தொடர்பாக கணினியில் பதிவு செய்யப்பட்டுள்ள விவரங்களை ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1929ம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டுள்ள அரசு பள்ளி கட்டிடம் நூற்றாண்டு காண உள்ள நிலையில் கட்டிடத்தின் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் முழு உருவ வெண்கல சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர் ஆய்வின் போது திருத்தணி வட்டார கல்வி அலுவலர்கள் செலபதி உடன் இருந்தார்.

* ஆவடி கிளை நூலகத்தில் ஆய்வு
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், 6000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு, திருவள்ளுவர் மாவட்டத்தின் முழுநேர கிளை நூலகம் செயல்படுகிறது. இந்த நூலகம், பல ஆண்டுகளாக பாழடைந்த கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில், காமராஜர் நகர், ஜே.பி.எஸ்டேட், வசந்தம் நகர், மூர்த்தி நகர், கோவர்த்தனகிரி நகர், பருத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 5000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த கட்டிடம் பாழடைந்த நிலையில் உள்ளதால் மழை நேரத்தில், நீர் கசிந்து இங்குள்ள புத்தகங்கள் வீணாகும் சூழல் உருவாகி வருகிறது. நூலகத்தைச் சுற்றி மழைநீர் தேங்கி நிற்பதால், வாசகர்கள் வந்து செல்வது நாளுக்குநாள் குறைந்து வருகிறது. இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ், நேற்று மதியம் ஆவடியில் உள்ள கிளை நூலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். சிதிலமடைந்த கட்டிடத்தை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், புதிய நூலகம் கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டு, தேவையான நடவடிக்கைகளை உடனே மேற்கொள்வதாக நூலகரிடம் உறுதி அளித்துள்ளார்.

The post திருத்தணி வட்டார கல்வி அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article