சென்னை, ஏப்.25: திருத்தணி மற்றும் சிறுவாபுரி முருகன் கோயில்களுக்கு ரூ.124.5 கோடியில் மாற்றுப்பாதை அமைக்கப்படும், என சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் (காங்கிரஸ்) பேசுகையில், ‘திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி சட்டமன்ற தொகுதி, சின்னம்பேடு, சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சிறப்பு திட்டம் ஏதாவது செயல்படுத்தப்படுமா,’ என்றார்.
இதற்கு பதிலளித்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: சிறுவாபுரி முருகன் கோயில் பல்வேறு வகையில் பக்தர்களுடைய நேர்த்திக்கடனுக்கு பரிகாரம் காணுகின்ற ஒரு ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயிலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் குறைந்தபட்சம் 50,000 பக்தர்களும், வார இறுதி நாட்களில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்களும், மற்ற நாட்களில் 1000லிருந்து 2000 பக்தர்கள் வரை வருகின்றனர். இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 2022ம் ஆண்டு ஒரு கோடி ரூபாயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவுற்றிருந்தன. தற்போது ரூ.16.50 கோடி மதிப்பீட்டில் பெருந்திட்ட வரைவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயில் திருக்குளம் ரூ.3 கோடியில் சீரமைக்கப்பட்டுள்ளதோடு, பக்தர்களுக்காக ரூ.38 லட்சம் செலவில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரூ.22.90 லட்சம் செலவில் அர்ச்சகர் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதோடு மட்டுமல்லாமல் சிறுவாபுரி கோயிலுக்கு மாற்று வழிப்பாதை அமைத்திட வேண்டும் என அந்த மாவட்ட அமைச்சர் சா.மு.நாசரும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி.ஜே.கோவிந்தராஜன், துரை சந்திரசேகர் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று நானும், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரும் நேரடியாக ஆய்வு செய்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றவுடன் அதற்கு ரூ.67 கோடியை அரசு நிதியாக வழங்கி அந்த சாலையை விரிவாக்குவதற்கும் முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். அந்த கோயிலில் இந்த ஆண்டு இலவச மருத்துவ மையத்தையும் கொண்டு வந்திருக்கிறோம். ஆகவே இந்த ஆண்டு இறுதிக்குள் பக்தர்களுடைய தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்.
துரை.சந்திரசேகர்: சிறுவாபுரி முருகன் கோயிலில் நடைபெறுகின்ற பணிகளையும் சேர்த்து எப்போது இந்த பணிகள் முடிவுக்கு வரும். திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கின்ற திருத்தணி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வருகிறார்கள். அவர்களுக்கும் அடிப்படை வசதிகள் செய்வதற்குரிய திட்டம் ஏதேனும் இருக்கிறதா. அமைச்சர் பி.கே.சேகர்பாபு: தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பிறகு திருத்தணி முருகன் கோயிலுக்கு மேற்கொள்ளப்பட்ட பணிகளை சொல்வதென்றால் இந்த நாள் முழுவதும் போதாது என்பதால் ஒரு சில திட்டங்களை மட்டும் பேரவையின் முன்வைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
திருத்தணி முருகன் கோயிலின் தங்கத்தேர் 2014ம் ஆண்டுக்கு பிறகும், வெள்ளித்தேர் 2017க்கு பிறகும் பக்தர்கள் பயன்பாட்டில் இல்லை. இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு இந்த இரண்டு தேர்களையும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறோம். அதேபோல் தெலங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் திருத்தணிக்கு மாற்று வழி அமைப்பதற்காக அரசிடம் வைத்த கோரிக்கை ஏற்று தமிழக முதல்வர் இந்த நிதியாண்டில் ரூ.57.50 கோடியை அரசு மானியமாக வழங்கி அந்த மாற்றுப் பாதையை அமைப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறார்.
அதோடு மட்டுமில்லாமல் அங்கு தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளி, அன்னதானக்கூடம் என ரூ.183.53 கோடி செலவில் பெருந்திட்ட வரைவினை கோயிலில் செயல்படுத்தி வருகிறோம். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு தான் அந்த கோயிலில் நாள் முழுவதும் அன்னதான திட்டம், கட்டணமில்லாத மருத்துவ மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் நலன் கருதி, ரயில் நிலையத்திலிருந்து மலைக்கோயிலுக்கு இலவசமாக 2 பேருந்துகளை விடுமுறை மற்றும் திருவிழா நாட்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இயக்கி வருகிறோம். பக்தர்களுடைய கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்பட்டு வரும் காலங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
The post திருத்தணி மற்றும் சிறுவாபுரி முருகன் கோயில்களுக்கு ரூ.124.5 கோடியில் மாற்றுப்பாதை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.