திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2 லட்சம் மெட்ரிக் டன் இலக்கில் கரும்பு அரவை தொடக்கம்: அமைச்சர், எம்எல்ஏக்கள் பங்கேற்பு

5 hours ago 1

திருத்தணி: திருவாலங்காட்டில் இயங்கி வரும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். திருத்தணி, திருவாலங்காடு, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை மற்றும் அரக்கோணம் உட்பட 7 உப கோட்டங்களிலிருந்து கரும்பு விவசாயிகள் சாகுபடி செய்த கரும்பை சர்க்கரை ஆலையில் அரவைக்கு அனுப்ப எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், நடப்பு பருவத்திற்கான கரும்பு அரவை துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை வகித்தார். ஆலையின் செயல் ஆட்சியர் நர்மதா வரவேற்றார். இதில், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாட்டு தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்துகொண்டு கரும்பு அரவை பணிகளை தொடங்கி வைத்தார்.

பின்னர், அமைச்சர் பேசுகையில்,, நடப்பாண்டு 2 லட்சம் மெட்ரிக் டன்கள் கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 9.50 சதவீத சர்க்கரை கட்டுமானத்தில் 1.90 லட்சம் குவிண்டால் உற்பத்தி செய்யப்பட உள்ளது. தடையின்றி கரும்பு அரவை பணிகள் நடைபெற இயந்திர தளவாடங்கள் பழுது நீக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. விவசாயிகளுக்கு கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் சார்பில் கரும்பு வெட்டுக்கு முன்தேதியிட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ள நாட்களில் கரும்பு அறுவடை செய்து ஆலைக்கு அனுப்பி பயன்பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எம்எல்ஏக்கள் திருத்தணி எஸ் சந்திரன், திருவள்ளூர் விஜி.ராஜேந்திரன், திமுக ஒன்றிய செயலாளர்கள் எம்.ராஜேந்திரன், மகாலிங்கம், மீனவரணி மாவட்ட துணை அமைப்பாளர் ஞானமூர்த்தி, கரும்பு விவசாயிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2 லட்சம் மெட்ரிக் டன் இலக்கில் கரும்பு அரவை தொடக்கம்: அமைச்சர், எம்எல்ஏக்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article