திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் பக்தர்களை வழிமறித்து வசூலிக்கும் கும்பல்

12 hours ago 2

*நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் பக்தர்களை வழிமறித்து, அச்சுறுத்தி கட்டாய வசூல் செய்யும் கும்பல் மீண்டும் தூக்கியுள்ளது. இதனை தடுக்க திருக்கோயில் நிர்வாகமும், காவல்துறையினரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுபடைவீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், திருவிழாக்காலங்களில் லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.

இதனால் திருச்செந்தூர் கோயிலுக்கு வரும் பக்தர்களை நம்பி நூற்றுக்கணக்கான வணிகர்களின் வாழ்வாதாரம் காக்கப்படுகிறது. இது ஒரு புறமிருக்கு பக்தர்களை குறிவைத்து கோயிலுக்கு வந்து வசூல் செய்யும் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக திருச்செந்தூர் கோயிலுக்கு தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் கோயில் வளாகத்தில் நுழைந்தவுடன் தங்கள் மிதியடி, கொண்டு வந்த பொருட்கள் ஆகியவற்றை பாதுகாக்க இலவசமாக பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து செல்கின்றனர்.

முடிகாணிக்கை செலுத்திட கட்டணம் கிடையாது. கோயிலில் விரைவு தரிசனம் செய்திட ரூ.100 மட்டுமே ஒரே கட்டணமாக உள்ளது. மற்றபடி இலவச பொது தரிசனம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தனி வழி இலவசமாக உள்ளது. கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பிறகு வெளியே திருக்கோயில் அன்னதானத்திட்டத்திலும் பக்தர்கள் பயனடைகின்றனர். இதனால் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்திட பக்தர்களின் செலவு பெரிய அளவில் இல்லை.

இந்நிலையில் திருச்செந்தூர் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வரும் பக்தர்களை வழிமறித்து கட்டாய வசூல் செய்யும் கும்பல் தற்போது மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது. இவர்கள் கோயிலுக்கு வெளியே நாழிக்கிணறு பேருந்து நிலையம், வடக்கு நுழைவாயில் அருகே அதிகளவில் சுற்றித்திரிகின்றனர். இளைஞர்கள் முதல் நடுத்தரவயதுடைய பச்சை மற்றும் காவி நிற வேஷ்டியும், சட்டையும் அணிந்தும், கழுத்தில் மாலைகளும், தலையில் தலைப்பாகை போல துணியால் சுற்றியும், ஒரு கையில் தடி அல்லது சிறிய வேலும், மறு கையில் கமண்டலமும், தோளில் பை அணிந்தும் வலம் வருகின்றனர்.

அவர்கள் நடந்து வரும் பக்தர்களை குறி வைத்து அவர்களிடம் முதலில் 1 ரூபாய் மட்டும் கேட்டுப்பெறுகிறார்கள். தொடர்ந்து அவர்களிடம் ஏதேதோ கூறி ரூ.500, ரூ.1000 தந்தால் மட்டுமே உங்களின் தோஷம் நீங்கும்… குறை தீரும் எனக்கூறி அச்சுறுத்தி பணத்தை வசூல் செய்கின்றனர். தங்களின் குறைதீர முருகனை வழிபட வரும் பக்தர்கள் கட்டாய வசூல் செய்பவர்களிடம் ஏமாற்றமடைகின்றனர். இதேபோல நடுத்தர குடும்ப பெண்கள் சிலரும் வாடிக்கையாகவே பக்தர்களிடம் காணிக்கையாக வசூல் செய்வதும் அதிகரித்துள்ளது. பெரும்பாலான பக்தர்கள் வசூல் கும்பலிடம் மாட்டிக்கொள்கின்றனர்.

ஆனால் சில சமயத்தில் இவர்கள் பக்தர்களிடம் வசூலிக்கும் பாணியை அருகில் வேறுயாராவது நோட்டமிடுவதை அறிந்தால் ரூ.1 மட்டும் வாங்கி விட்டு நகர்கின்றனர். இல்லாத பட்சத்தில் பக்தர்களின் பாடு அம்போவாகி விடுகிறது. எனவே திருக்கோயில் நிர்வாகமும், காவல்துறையினரும் பக்தர்களிடம் கட்டாய வசூல் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பக்தர்களை காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் பக்தர்களை வழிமறித்து வசூலிக்கும் கும்பல் appeared first on Dinakaran.

Read Entire Article