திருச்செந்தூர், ஏப். 4: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் நாழிக் கிணறு பஸ் நிலையம் செல்லும் சாலையினை சீரமைக்கும் பணிகள் நடப்பதால் வாகன நெருக்கடி ஏற்படுகிறது. இதுகுறித்து தெரியாமல் நகருக்குள் வரும் வாகனங்கள் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் பகத்சிங் பஸ் நிலையம் அருகில் உள்ள பயணியர் விடுதி சாலை வழியாகவும், சபாபதிபுரம் தெரு வழியாகவும் நாழிக்கிணறு பஸ் நிலையத்தை கடந்து கோயிலுக்கு செல்கிறது. இதனால் இவ்விரு பாதைகளும் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில் நாழிக்கிணறு பஸ் நிலையம் செல்லும் வழியான சபாபதிபுரம் தெருவில் தற்போது சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட்ட சாலையினை சீரமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. மேலும் திருச்செந்தூர் கோயிலில் பெருந்திட்ட வளாகப் பணிகளின் ஒரு பகுதியாக நாழிக்கிணறு பஸ் நிலையத்தில் நடைபெறும் பணிகளுக்காக கடந்த மார்ச் 31ம் தேதி முதல் அங்கு வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெரியாமலும், சபாபதிபுரம் தெருவில் சாலை சீரமைக்கும் பணி தெரியாமலும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் நகருக்குள் நுழைந்து அமலிநகர் சந்திப்பு வரை வந்து விடுகின்றனர். அங்கிருந்து கோயிலுக்கு எப்படி செல்வது? என தெரியாமல் உள் தெருக்களில் போய் வழி தெரியாமல் வாகன ஓட்டிகள் விழி பிதுங்குகின்றனர். மேலும் தடுப்பு அரண்கள் வைத்து சாலை சீரமைக்கும் பணி நடந்து வரும் வேளையில் வெவ்வேறு பாதையில் வரும் வாகனங்கள் பணி நடக்கும் இடத்திற்கு வந்து தடுப்புகளை அகற்றுமாறு வலியுறுத்தி வருகின்றனர். இதனால் சாலை பணியில் ஈடுபடுவோருக்கும், வாகனங்களில் வரும் பக்தர்களுக்கும் அவ்வப்போது தகராறு ஏற்படுகிறது.
எனவே நாழிக்கிணறு பஸ் நிலையத்தில் வேலை நடப்பது குறித்து நகரின் எல்லையிலேயே பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தெரிந்திடும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனவும், போக்குவரத்து போலீசார் வாகனங்களை மாற்று வழியான பயணியர் விடுதி சாலை (டி.பி.ரோடு) வழியாக அனுமதித்து போக்குவரத்து நெருக்கடியினையும், தொலைதூரத்தில் இருந்து வரும் பக்தர்கள் அலைக்கழிக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோடை விடுமுறையில் குவியும் பக்தர்கள் இதனிடையே தற்போது தனியார் பள்ளிகளிலும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறையளிக்கப்பட்டுள்ளதால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்து வருகிறது. எனவே பக்தர்கள் வந்து செல்ல வசதியாக சாலைப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
The post திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செல்லும் வழியில் சாலை சீரமைப்பு பணியால் போக்குவரத்து நெருக்கடி appeared first on Dinakaran.