திருச்செந்தூர் கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் பக்தர்கள் தங்கும் விடுதி: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

3 hours ago 3

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ.10.57 கோடி செலவில் கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை திறந்து வைத்து, ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலின் 6 பணியாளர்களுக்கு அர்ச்சகர்களாக பதவி உயர்வு ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 10.57 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 52 அறைகளுடன் கூடிய பக்தர்கள் தங்கும் விடுதியினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோவிலின் 6 திருக்கோவில் பணியாளர்களுக்கு அர்ச்சகர்களாகப் பதவி உயர்வு வழங்கி, அதற்கான ஆணைகளை வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறையானது தனது நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், பக்தர்கள் அதிகளவில் வருகைதரும் திருக்கோவில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திட ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவினை ஏற்படுத்தி, பக்தர்களின் அனைத்து தேவைகளும் நிறைவு செய்யப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாக திகழும் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு உபயதாரர் நிதி மற்றும் திருக்கோவில் நிதியின் மூலம் பெருந்திட்ட வரைவின்கீழ், 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வரிசை முறை, காத்திருப்பு அறை, மருத்துவ மையம், முடிக்காணிக்கை செலுத்தும் இடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, அன்னதானக்கூடம், பக்தர்கள் தங்கும் விடுதிகள், சுகாதார வளாகம், திருமண மண்டபங்கள், பணியாளர் குடியிருப்பு ஆகிய திருப்பணிகளின் கட்டுமானப் பணிகளை முதல்-அமைச்சர் 28.09.2022 அன்று தொடங்கி வைத்தார். அத்திருப்பணிகளில் 33.25 கோடி ரூபாய் செலவில் புதிதாக கட்டப்பட்ட முடி காணிக்கை மண்டபம், வரிசை வளாகம், சுகாதார வளாகங்கள், கலையரங்கம், நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் நீரேற்று நிலையம், ஆகியவை கடந்த 14.10.2024 அன்று முதல்-அமைச்சரால் பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் இன்றையதினம் 10 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 52 அறைகளுடன் கூடிய தங்கும் விடுதியினை பக்தர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்த அரசு பொறுப்பேற்றபின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளில் 11,712 திருக்கோவில்களில் மேற்கொள்ளப்பட்ட 7,006 கோடி ரூபாய் மதிப்பிலான 26,695 பணிகளில் இதுவரை 3,526 கோடி ரூபாய் மதிப்பிலான 13,541 பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

மேலும், ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோவிலில் கைங்கர்யம் பணியிடத்தில் பணிபுரிந்து வந்த 6 திருக்கோவில் பணியாளர்களுக்கு அர்ச்சகர்களாகப் பதவி உயர்வு வழங்கி, அதற்கான ஆணைகளை முதல்-அமைச்சர் இன்று வழங்கினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article