திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கடந்த 18ம்தேதி தெய்வானை யானை தாக்கியதில் பாகன் உதயகுமாரும், அவரது உறவினரான சிசுபாலனும் படுகாயமடைந்து உயிரிழந்தனர். இவர்கள் உயிரிழந்ததையடுத்து வனத்துறை மற்றும் கால்நடைத்துறையின் தீவிர கண்காணிப்பில் யானை குடிலில் பாதுகாப்பாக உள்ளது.
இந்த நிலையில் இன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோயில் யானை தெய்வானையை நேரில் ஆய்வு செய்தார். அவர் யானை கட்டப்பட்டுள்ள இடத்தில் யானையை பார்வையிட்டு அதிகாரிகள் மற்றும் கால்நடை வனத்துறை மருத்துவர்கள் மனோகரன், ஆண்டனியினிடம் யானையின் நிலை குறித்து கேட்டறிந்தார். அப்போது அமைச்சரிடம் வனத்துறை, கால்நடை மருத்துவர்கள் “யானை இயல்பு நிலையில்தான் இருக்கிறது. உணவு, தண்ணீர் உள்ளிட்டவை சகஜமாக சாப்பிடுகிறது. 7 நாட்கள் கண்காணிப்பு முடிந்துள்ள நிலையில் இன்னும் 14 நாட்கள் அதாவது 21 நாள் கண்காணிப்பு தேவை. மேலும் பக்தர்கள் அதிகம் வரும் இடம் என்பதால் யானை பாகன்கள் யானை அருகே இருக்க வேண்டும்’’ என்று கூறினர்.
இதையடுத்து அமைச்சர் சேகர்பாபு யானை பாகனான ராதாகிருஷ்ணன் மற்றும் செந்தில் ஆகியோரிடம் யானை குறித்து நலம் விசாரித்தார். தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு யானை தெய்வானையை அருகில் சென்று பார்த்து கரும்பு வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் உயிரிழந்த யானை பாகன் உதயகுமார் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியதுடன் உதயகுமாரின் மனைவி ரம்யா மற்றும் சிசுபாலனின் மகள் அக்ஷயாவுக்கும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியாக தலா ரூ.2 லட்சம் வழங்கினார். மேலும் திருக்கோயில் நிதியிலிருந்து உதயகுமாருக்கு ரூ.5 லட்சமும், தக்கார் அருள்முருகன் சார்பில் இருவருக்கும் தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.
The post திருச்செந்தூர் கோயில் யானையை நேரில் பார்வையிட்டார் அமைச்சர் சேகர்பாபு: பாகன், உறவினர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கினார் appeared first on Dinakaran.