மதுரை: பொங்கல் பண்டிகையன்று சி.ஏ. தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்வு அட்டவணையை மாற்ற வேண்டும் என ஒன்றிய பாஜ அரசுக்கு மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார். நாடு முழுவதும் சிஏ தேர்வு எனப்படும் பட்டயக் கணக்காளர் பணிக்கான தேர்வு வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தேர்வு பொங்கல் பண்டிக்கையன்று நடைபெறுவதால் தமிழ்நாட்டில் இருந்து இத்தேர்வை எழுதுவோர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சிஏ தேர்வுக்கான கால அட்டவணையை மாற்றி அமைக்க வலியுறுத்தி ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது: சிஏ பவுண்டேஷன் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களின் பெற்றோர் பலர் என்னை தொடர்பு கொண்டனர். தமிழ்நாட்டின் மக்கள் திருவிழாவான பொங்கல் (14.1.2025) அன்றும், உழவர் திருநாள் (16.1.2025) அன்றும் முறையே Business laws மற்றும் Quantitative Aptitude தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. துர்கா பூஜை, ஹோலி, பண்டிகை, தீபாவளி பண்டிகைக்கு நிகரானது தமிழக மக்களுக்கு பொங்கல் பண்டிகை.
அறுவடை திருநாளான பொங்கல் திருவிழா என்பது தமிழ்நாட்டின் தனித்துவமிக்க பண்பாட்டு திருவிழா என்பதை கருத்தில் கொண்டு, தேர்வர்களுக்கு சிரமங்களின்றி இந்த தேர்வுக்கான அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இது தொடர்பாக சு.வெங்கசேடன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், `பொங்கல் திருநாளன்று தேர்வுகள்; எத்தனை முறை சொன்னாலும் திருந்தப்போவதில்லை. அதற்காக நாம் ஓயப்போவதும் இல்லை. ஒன்றிய அரசே தேர்வு தேதியை உடனே மாற்று. தமிழ் பண்பாட்டை அவமதிக்கும் செயலை கைவிடு’ என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக ஐசிஏஐ தலைவர் சி.ஏ.ரஞ்சித் குமார் அகர்வாலுக்கும் எம்பி கடிதம் எழுதியுள்ளார்.
The post பொங்கலன்று சி.ஏ. தேர்வுகள் அட்டவணையை மாற்ற ஒன்றிய அரசுக்கு மதுரை எம்பி கடிதம் appeared first on Dinakaran.