திருச்செந்தூர்,
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ம் திருநாளான இன்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராதனையும் நடந்தது.
தொடர்ந்து யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீனம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளினார். அங்கு சுவாமி, அம்பாளுக்கு மஞ்சள் பொடி, மா பொடி, திரவிய பொடி, இளநீர், தேன், பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலில் தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவு படி திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்களும் செய்து வருகிறார்கள்.