திருச்செங்கோடு தாலுகாவில் பழமை வாய்ந்த இலுப்புலி ஏரி சுற்றுலா தலமாக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு

3 hours ago 2

திருச்செங்கோடு: எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்புலியில் உள்ள ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்புலி கிராமம் கொளத்துவளவு அருகே உள்ள ஏரி 100 வருடங்கள் பழமையானது. 140 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி, எலச்சிபாளையத்தில் இருந்து மாணிக்கம்பாளையம் செல்லும் வழியில் உள்ளது. மன்னர்கள் வாழ்ந்த இவ்வூரில் சிவகாமி உடனமர் சீர்காழிநாதர், வரதராஜ பெருமாள், பாண்டீஸ்வரன், கருப்பணார், ஓம்காளி அம்மன், அத்தாயி அம்மன், பொன்னாச்சிஅம்மன், அண்ணமார்-ராக்கி அண்ணன் ஆகியோருக்கு கோயில்கள் உண்டு. மேலும், கிறிஸ்தவ ஆலயமும் உள்ளது.

சேலம், திருப்பத்தூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரியை உள்ளடக்கிய சேலம் மாவட்டத்தில், முதன்முதலாக ஆங்கிலேயர்களால் 1919ம் ஆண்டு காவல் நிலையம் இலுப்புலியில் தான் ஏற்படுத்தப்பட்டது. சேலம் மாவட்டத்தின் வழியாக, மல்லசமுத்திரம் ஒன்றியம் ஆட்டையாம்பட்டி, மதியம்பட்டி, பருத்திப்பள்ளி, கொன்னையார் அகரம், பள்ளக்காடு வழியாக வரும் திருமணிமுத்தாற்றின் உபரிநீர், மழைக்காலங்களில் இலுப்புலி ஏரி வழியே சென்று இலுப்புலி, மாணிக்கம்பாளையம், கூத்தம்பூண்டி, லத்துவாடி, செருக்கலை, புதுப்பாளையம், பரமத்திவேலூர் காவிரி வரை செல்லும். தொடர் மழை பெய்து வருவதால், இந்த ஏரியில் நீர் வற்றாமல் உள்ளது. ஊராட்சியின் மூலம் ஒரு வருடத்திற்கு முன்பு, ஏரியை ஆழம் மற்றும் அகலப்படுத்தி, மீன்கள் வளர்க்கப்படுகின்றன. சுற்றுப்புற விவசாயிகள், ஏரி அருகில் உள்ள தங்களது நிலங்களில் கிணறு அமைத்து, இறவை பாசனம் மூலம் நிலக்கடலை, மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் பயிரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஏரியை சுற்றுலா தலமாக்கினால் மாணிக்கம்பாளையம், கிளாப்பாளையம், இலுப்புலி ஊராட்சி மக்கள் வேலை வாய்ப்பு பெற்று பொருளாதார மேம்பாடு அடைவர். இந்த ஏரியை சுற்றுலா தலமாக்கி பூங்கா அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு, அமைச்சர் மதிவேந்தன் நேரில் வந்து பார்வையிட்டு, சுற்றுலா தலம் மற்றும் படகு சவாரி அமைப்பதாக அறிவித்திருந்தார். இதனை வலியுறுத்தி, திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரனும் சட்டசபையில் பேசி உள்ளார். இதுகுறித்து நகரமைப்பு திட்டக்குழு உறுப்பினர் மதுராசெந்தில் கூறுகையில், ‘இலுப்புலி ஏரியானது சுற்றுலா தலமாக்க உகந்த இடம். இதனை முதலமைச்சர், துணை முதலமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோரிடம் வலியுறுத்தி, பொதுமக்களின் கோரிக்கை நிறைவேற முயற்சி எடுக்கப்படும். இதன் மூலம் எலச்சிபாளையம்- மாணிக்கம்பாளையம் தார்சாலை அகலப்படுத்தப்பட்டு, வாகனப் போக்குவரத்துக்கு மேம்படுத்தப்படும்,’ என்றார்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் கூறுகையில், ‘140 ஏக்கர் அளவில் உள்ள இலுப்புலி ஏரியை சுற்றுலாத்தலமாக்கி, படகு சவாரி மற்றும் பூங்கா அமைக்க வேண்டும் என பல வருடங்களாக வலியுறுத்தி வருகிறோம். சுற்றுலாத்தலமாக அமைந்தால், எங்கள் கிராமம் வளர்ச்சி அடையும். மேலும் அருகாமையில் உள்ள குக்கிராமங்களும் வளர்ச்சி பெற்று, மிக முக்கியமான ஏரி பூங்காவாக மாறுவதற்கான சூழல் உள்ளது. இதற்கு அரசு உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து, படகு சவாரி மற்றும் பூங்கா அமைக்க வேண்டும், என்றார். எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் கூறுகையில், ‘ஏரியை சுற்றுலாத்தலமாக மாற்றும் போது, இந்த ஊராட்சியின் அருகில் உள்ள பொதுமக்களும் பயன்பெறுவார்கள். கடந்த சில வருடங்களாக எம்எல்ஏ, எம்பிக்கள், அமைச்சர்கள் என அனைவரும் நேரில் வந்து, பார்வையிட்டு சுற்றுலா தலம் அமைப்பதாக கூறிச்சென்றுள்ளனர். எனவே, இலுப்புலி கிராமம் வளர்ச்சி பெறுவதற்கு உடனடியாக சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும்,’ என்றார்.

The post திருச்செங்கோடு தாலுகாவில் பழமை வாய்ந்த இலுப்புலி ஏரி சுற்றுலா தலமாக்கப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article